தவறான தரவுகள் – பதிவாளர்களை பணியிடை நீக்கம் செய்த ஹரியானா அரசு

சண்டிகார்: பாலின விகிதம் தொடர்பான தரவு விபரங்களை தவறாக வழங்கியதற்காக முனிசிபல் கவுன்சிலின் இரண்டு பதிவாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம்.

மேலும், அந்த இரண்டு அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பல்வால் முனிசிபல் கவுன்சிலின் பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர்(பிறப்பு & இறப்பு) ஆகியோர், கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய பாலின விகித தரவில்(data), கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில் 1000 ஆண்களுக்கு 1217 பெண்கள் உள்ளனர் என்ற விபரம் தரப்பட்டிருந்தது.

ஆனால், சுகாதார துறைக்கான தலைமை இயக்குநர் அலுவலகமோ, மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 950 பெண்களே இருப்பதாக விபரங்களைப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் பல்வால் முனிசிபல் கவுன்சில் அளித்த விபரங்களின் மீது சந்தேகம் எழவே, தலைமை பதிவாளர் அலுவலகத்தின் மூலம் விசாரணை நடைபெற்றது. இதன்மூலம், தரவுகளில் மோசடி நடைபெற்றது கண்டறியப்பட்டது.

இதனடிப்படையில், பதிவாளர் மொஹிந்தர் சிங் மற்றும் துணைப் பதிவாளர் சந்தீப் குமார் ஆகியோரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.