ஆன்டிராய்டுக்கு போட்டியாக ஹார்மனி ஒ.எஸ்

மெரிக்கச் சீன சந்தை வர்த்தக போட்டியில் சீன அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள வாவே நிறுவனத்துக்கு அமெரிக்க அரசாங்கம் தடை விதித்ததால் வாவே நிறுவன செல்பேசிகள் ஆன்டிராய்டு இயங்குதளத்தினை பயன்படுத்த கூகிள் தடை விதித்தது.

இதனையடுத்து தனது சொந்த இயங்குதளத்தினை உருவாக்க உள்ளதாக வாவே நிறுவனம் அறிவித்தது. அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற வாவே நிறுவன நிரலாளர்கள் சந்திப்பில் ஹார்மனி ஒ.எஸ் அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.

கூகிள் நிறுவனத்தின் எதிர்கால இயங்குதளமான பியுசியா OS ஐ போட்டியாக ஹார்மனி ஓ.எஸ் விளங்கும். ஏனெனில் பியூசியா இயங்குதளம் ஐஓடி(பொருட்களின் இணையம்), இயந்திர மொழி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றிற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டது. அதே போன்றுதான் ஹார்மனி ஓ.எஸ் இயங்குதளமும்  All Scenario Building Blocks என்பதை அடிப்படை யாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹார்மனி ஓ.எஸ் இயங்குதளமும் மைக்ரோ கெர்னலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தடையற்ற தொடர்பு

தற்போது புழக்கத்தில் உள்ள கருவிகளும், எதிர்காலத்தில் வரவுள்ள தொழில்நுட்ப கருவிகளுக் காகவும்  வாவே நிறுவனம் பகிர்ந்தளிப்பு கட்டமைப்பு அடிப்படையிலான இயங்குதளமாக உருவாக்கியுள்ளது. இதனால் ஐஓடி, அணியக்கூடிய கருவிகள் , டேப்ளேட், மேகக்கணிமை என எல்லா தொழில்நுட்பங்களுக்கும் ஒத்திசைவுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே எல்லா கருவிகளையும் எளிதில் தொடர்பு கொள்ளலாம், அதோடு ஹார்மனி ஓ.எஸ்க்காக நாம் உருவாக்கும் செயலிகள் தானாகவே பகிர்ந்தளிப்பு கட்டமைப்புக்கு மாற்றப்பட்டு எல்லா கருவிகளுடன் தொடர்புகளை எளிதில் ஏற்படுத்திக்கொள்ளும்

ஷார்மனிஓ.எஸ் ஆனது எல்லா நிரலாக்க மொழிகளுக்கும் ஒத்திசைவு வழங்கும். வாவே ஏஆ்கே கம்பைலர் வழியாக எல்லா நிரலாக்க மொழிகளுக்கும் ( கொட்லின், ஜாவா, ஜாவாஸ்கிரிப்ட், சி, சி++ போன்ற மொழிகளுக்கும், எச்டிஎம்எல் 5 மற்றும் ஏற்கனவே உள்ள ஆன்டிராய்டு செயலி களுக்கும் ஒத்திசைவை வழங்கும்.

மிக முக்கியமான நீங்கள் ஆன்டிராய்டு இயங்குதளத்தில் இருந்து ஹார்மொனி ஓ.எஸ் க்கு மாற விரும்பினால் அதற்கும் இயல்பாகவே வழி உள்ளது என்றும், குறைந்த பட்சம் ஒரு நாள் முதல் இரண்டு நாளுக்கும் உங்கள் செல்பேசியை ஆன்டிராய்டிலிருந்து ஹார்மனி ஓ.எஸ்க்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல இந்த இயங்குதளம் குறிப்பாகக் கட்டற்ற மென்பொருள் அடிப்படையில் வெளியிடப்படவுள்ளதால் உலகமெங்கிருந்தும் நிரலாளர்கள் இந்த கட்டமைப்பிற்குப் பங்களிப்பு செய்யமுடியும்.

ஹார்மனி ஓ.எஸ் எதிர்கால வெளியீடுகள்

HarmonyOS 1.0 in 2019 — ஹார்மனி ஓ.எஸ் இயங்குதளம்  ஹானர் திறன் தொலைக்காட்சி முதலில் உருவாக்கப்பட்டு இன்று (ஆகஸ்டு 10 ,2019) சீனாவில் வெளியிடப்படுகின்றது.

HarmonyOS 2.0 in 2020 — ஹார்மனி ஓ.எஸ் மேஜை கணினி, லேப்டாப், திறன் கடிகாரங்கள், திறன் கைப்பட்டைகள் போன்ற கருவிகளும் ஒத்திசைவை வழங்கும்

HarmonyOS 3.0 in 2021 —செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் குரல் வழி கருவிகளுக்கு ஒத்திசைவு

HarmonyOS in 2022 — மெய்நிகர் நிலை கருவிகளுக்கு ஒத்திசைவு போன்றவற்றையும் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது

கூகிள் நிறுவனம் இந்த போட்டியை எப்படி அணுகப்போகிறென்று தெரியவில்லை. ஏனெனில் உலகின் மிகப்பெரிய செல்பேசி விற்பனை சந்தையை வாவே நிறுவனம் கையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் இந்தியாவிலிருந்து ஏதேனும் நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் களமிறங்கவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு

-செல்வமுரளி

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: compete with Android, HarmonyOS, Huawei unveils own operating system
-=-