Random image

ஹரோபெலே கபாலா மலை இயேசு மலையானது எப்படி?- ஒரு விரிவான பார்வை

“சில வெளியாட்கள் வந்து, இயேசு நாதரின் சிலை எழும்புவதை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் இந்துக்கள், நாங்கள் அதை விரும்புகிறோம் என்று நாங்கள் கூறுகிறோம்,”என்கிறார் சிக்கஸ்வாமி, ராமநகர மாவட்டத்தில் ஹரோபெலே கிராமத்தில் உள்ள புனித ஜெபமாலை தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து கொண்டு.

“அவர்களின் தலைவர் மங்களூரிலிருந்து வந்தவர். அவர் துளுவைத் தாய் மொழியாகக் கொண்டவர். அவருக்கு சரியான கன்னடம் பேசக் கூடத் தெரியாது மேலும் இங்கு யாருக்கும் புரியாத ஒரு உரையை நிகழ்த்துகிறார்.  நாங்கள் ஏன் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும்?

அடுத்த முறை, அவர்கள் ஏதாவது பிரச்சினைகளை உருவாக்கினால், நாங்கள் இந்துக்கள் சென்று அவர்களுக்கு எதிராக அணிதிரள்வோம். அவர்கள் 5000 பேரைக் கொண்டு வந்தால்,எங்களுக்கு 55000 பேர் கிடைப்பார்கள், என்று 60 வயதான அந்த பட்டு விவசாயி ஏளனமாகப் பேசுகிறார், மற்ற விவசாயிகளும் அவரது கருத்துக்கு உடன்படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் அருகிலுள்ள கனகாபுரா நகரத்தில் இந்த அழகிய கிராமத்தைப் பார்த்த வண்ணம் இருக்கும் மலையில் 114 அடியில் இயேசு கிறிஸ்துவின் சிலையை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு எதிராக ஒரு பேரணியை நடத்திய மூன்று நாட்களுக்குப் பிறகு, பல நூற்றாண்டுகள் பழமையான வாழ்க்கை முறையில் ஒரு தடங்கல் ஏற்பட்டதால் கோபமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

“எங்களிடம் சுமார் 400 ஆண்டு கால கிறிஸ்தவ வரலாறு உள்ளது. 1662 ஆம் ஆண்டில் அரோபீலில் (ஹரோபெலே முன்பு அந்தப் பெயரால் அழைக்கப்பட்டது) முதல் தேவாலயம் வந்தது என்று அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான சின்னராஜ் கூறுகிறார். கனகபுரா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கிறிஸ்தவத்தின் பிறப்பு குறித்து கர்நாடகாவில் ஆராய்ச்சி செய்த பாதிரியார் ஐ அண்டப்பா எழுதிய புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.

ஹரோபெலே, சுமார் 3500 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிறிய கிறிஸ்தவ பெரும்பான்மை கிராமமாகும்.  இது பெரும்பாலும் இந்துக்கள் வாழ்கின்ற கிராமங்களின் கொத்துக்களால் சூழப்பட்டுள்ளது. “ஒரு ஜேசுட் பாதிரியார், தந்தை லியோனார்ட் சின்னாமி, 17 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்து தேவாலயத்தை அமைத்தார். அவர் மைசூர் மிஷனின் கீழ் பணிபுரிந்து வந்தார். அவரும் அவரது சக பாதிரியார்களும் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு ஈர்த்தனர்.

மக்கள் இப்போது பல தலைமுறைகளாக இந்த நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள் – மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள், ”என்கிறார் பாரிஷ் பாதிரியார் சின்னப்பா. “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், எல்லா மதத்தினரையும் மலையின் உச்சியில் காணலாம். அவர்கள் ஒரு நல்ல பட்டுப்புழு விளைச்சல் கிடைத்தால், அங்கே சென்று ஒரு மாலையை சாத்துகிறார்கள். அங்கே பிரார்த்தனை செய்வதன் மூலம் அவர்களின் நோய் அல்லது துரதிர்ஷ்டங்கள் குறைந்துவிட்டால், அவர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். ”

கிறிஸ்மஸுக்கு ஒரு நாள் கழித்து, கனகாபுராவின் ஏழு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ., டி கே சிவகுமார், சிலைக்கு தனது பங்களிப்பாக ரூ .10.8 லட்சம் காசோலையை ஹரோபெலே கபாலா பெட்டா அவிபிருதி அறக்கட்டளைக்கு வழங்கினார். “அவர் சிலைக்கு நிதியுதவி செய்கிறார் என்று சொல்வது சரியல்ல. அதற்காக நாங்கள் கிராமத்திலிருந்து நிதி திரட்டுகிறோம். நாங்கள் அவரிடம் ஒரு பங்களிப்புக்காகச் சென்றோம், ”என்கிறார் சின்னராஜ்.

சங்க பரிவருடன் இணைந்த அமைப்புகள் காங்கிரஸ் தலைவரை “திருப்திப்படுத்துவதாக” குற்றம் சாட்டியதோடு, சிலைக்கு நிதியுதவி செய்வதன் மூலம், கிறிஸ்தவ மிஷனரிகளால் “பெரிய அளவிலான மத மாற்றங்களை” ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டினர். மலையின் உச்சியில் உள்ள முனிவஸ்வர (சிவன்) கோயில் இருக்கும் இடத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலையை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“அங்குள்ள இந்துக்களிடையே பெரும் அச்சம் உள்ளது … ஒரு சிறிய சிறுபான்மையினர், சுமார் 800 கிறிஸ்தவ குடும்பங்கள், எங்கள் மலையில் இவ்வளவு பெரிய சிலையை கட்ட எப்படி அனுமதிக்க முடியும்?” என்கிறார் கனகபுராவின் பாஜக பொதுச் செயலாளர் ஜெகன்நாத்.

“நாங்கள் மக்களை மதம் மாற்ற முயற்சித்திருந்தால், அப்பகுதி மக்கள் அமைதியாக இருந்திருப்பார்களா?” என்று எதிர் கேள்வி கேட்கிறார் ஃபாதர் சின்னப்பா. இது கிராமத்தின் வழியாக எதிரொலிக்கும் காட்சி. “இந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இந்து அவர்களிடம் புகார் அளித்ததை எனக்குக் காட்டுங்கள். இவை அனைத்தும் பொய்கள். இது டி.கே.எஸ்ஸின் அரசியல் இலக்கு மட்டுமே ”என்று வோக்கலிகா இந்துவான கிராம பஞ்சாயத்து உறுப்பினரான சிக்கதிமையா கூறுகிறார்.

கனகாபுரா டி கே சிவகுமார் மற்றும் பெங்களூர் கிராமப்புற நாடாளுமன்ற உறுப்பினரான அவரது சகோதரர் டி கே சுரேஷ் ஆகியோரின் தேர்தல் கோட்டையாக கருதப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் இங்கு மிகக் குறைவான இருப்பைக் கொண்டுள்ளது.

அருகிலுள்ள கிருஷ்ணாய்தோடு கிராமத்தில் வசிக்கும் சிக்காஸ்வாமி, கபாலா பெட்டா ஒரு கோவிலுக்குச் சொந்தமான இடம் என்று தகராறு செய்யும் இந்துக்களில் ஒருவர். “முனிஸ்வர பெட்டா வேறு. இது 8 கி.மீ தூரத்தில் உள்ளது. தலைமுறை தலைமுறையாக, என் தந்தை மற்றும் தாத்தாவின் காலத்திலிருந்தே, இதை நாங்கள் ஜேசு பெட்டா (இயேசுவின் மலை) என்று அறிந்திருக்கிறோம், என்றார்.

ஹரோபெலேயின் புகழ் இந்த சச்சரவுகளுக்கு முன்னரே, அம்மாநிலத்திலுள்ள கத்தோலிக்கர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களால் மிகுந்த பயபக்கியுடன் அனுசரிக்கப்பட்ட அதன் வருடாந்திர ஈஸ்டர் பண்டிகையிலிருந்து தோன்றியது. கபாலா பெட்டா அந்த அலங்கார அணிவகுப்பின் மத்தியில் உள்ளது. “புனித வெள்ளியன்று, ஆயிரக்கணக்கான மக்கள் சிலுவையின் வழியைப் பின்பற்றி அந்த மலைக்குச் செல்கிறார்கள்“, என்கிறார் ஃபாதர் சின்னப்பா.

இதைத் தொடர்ந்து தேவாலய வளாகத்தில் உள்ளூர்வாசிகள் இயக்கும் ஒரு ‘பேரார்வ நாடகம்‘நடைபெறுகிறது. “நிச்சயமாக இந்து குழந்தைகளும் நாடகத்தில் பங்கேற்கிறார்கள். எல்லா குழந்தைகளும் நடனமாட விரும்புகிறார்கள்”, என்கிறார் தேவாலய வளாகத்தில் கன்னட வழி பள்ளி நடத்தும் ஆர்.சி வித்யா சான்ஸ்டேவின் முன்னாள் ஆங்கில ஆசிரியை மரியா.

“இந்த ஈஸ்டர் பண்டிகை குறைந்தது 1906 முதல் நடந்து வருவதாக பதிவுகள் காட்டுகின்றன” என்று பெங்களூரு கத்தோலிக்க பேராயர் பீட்டர் மச்சாடோ கூறுகிறார், இவர் சமீபத்தில் முதலமைச்சர் பி எஸ் யெடியுரப்பாவை சந்தித்தார். “எனது வேண்டுகோள் என்னவென்றால், அரசாங்கம் இந்த விஷயத்தில் ஒரு குறுகிய அரசியல் பார்வையைக் கொள்ளக் கூடாது என்பதுதான். அரசியலமைப்பு அனைத்து மதங்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுள்ளது, ”என்று அவர் கூறுகிறார்.

சிலையை கட்டும் பொறுப்பில் உள்ள அறக்கட்டளையின் உறுப்பினர்களின் கூற்றுப்படி, 2001 ஆம் ஆண்டில் நிலத்திற்கான முதல் கோரிக்கை மாநில அரசிடம் வைக்கப்பட்டது. அப்போது எந்த பதிலும் இல்லை என்றாலும், ஒரு பெரிய சிலையை கட்டும் திட்டம் 2016 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.

பேராயர் மச்சாடோ, முதலமைச்சர் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வை அளிப்பார் என்று நம்பிக்கை கொள்ளும் அதே வேளையில், இது இந்தப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நுழைவதற்கான உபாயமாக இருக்குமோ என்ற கவலையும் எழுகிறது.

“இங்கே ஒரு கோயில் இருந்திருந்தால், நாங்கள் விட்டுக் கொடுத்திருப்போம். ஆனால் உண்மை மேலோங்க வேண்டும். அரசாங்கம் விவேகத்துடன் bசயல்பட வேண்டும். இது ஒரு இந்துக்களின் பிரச்சினை அல்ல என்பதால், அவர்கள் அவசரமாக செயல்படக்கூடாது. நாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால், ‘வாடிகனுக்குச் செல்லுங்கள்’ என்று மக்கள் எங்களிடம் சொல்ல முடியாது“, என்று சின்னாராஜ் கூறுகிறார். இது ஹரோபெலே வில் உள்ளவர்களின் குரலை எதிரொலிப்பதாக உள்ளது.