கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்கா டூ கனடா பயணம் செய்த ஹாரி தம்பதியினர்!

வாஷிங்டன்: கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருந்தாலும், தங்கள் வழி தனி வழி என்ற வகையில், அமெரிக்காவிலிருந்து சாலை வழியாக, கனடாவிற்கு சென்றடைந்துள்ளனர் பிரிட்டன் இளவரசர் சார்லஸின் இரண்டாவது மகன் ஹாரி – மேகன் தம்பதியினர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்கா – கனடா எல்லை மூடப்படும் முன்னதாகவே, அவர்கள் கனடாவுக்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து சமீபத்தில் விலகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அந்தத் தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு தனி விமானம் மூலமாக சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு சென்றடைந்தனர்.

ஹாலிவுட் நகரான லாஸ்ஏஞ்சலிஸில் ஹாரி -மேகன் தம்பதிக்கு உதவ மக்கள் தொடர்பு அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

பிரிட்டன் அரசக் குடும்பத்தில் இளவரசர் சார்லஸுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 93 வயதான இரண்டாம் எலிசபெத், அவரின் கணவர் 98 வயதான இளவரசர் பிலிப் உள்ளிட்டவர்கள் பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹாரி-மேகன் தம்பதி கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.