ஹாரி – மேகன் தம்பதியினரின் அரச குடும்ப அடைமொழி விரைவில் அகற்றம்?

லண்டன்: பிரிட்டன் அரசக் குடும்பத்திலிருந்து சமீபத்தில் விலகிய இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியினர், இனிவரும் நாட்களில், தங்களின் வர்த்தகம் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளிலும் ‘அரசப் பரம்பரை’ என்ற அடைமொழியை பயன்படுத்தமாட்டார்கள் என்று அவர்களின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் நடிகையான மேகன் மார்க்கலை மணந்துகொண்ட பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸ் – டயானா(மறைவு) தம்பதியினரின் இளையமகன் இளவரசர் ஹாரி. அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், ஹாரி-மேகன் தம்பதி, அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறி, சாமான்ய மக்களைப் போல, சுயமாக வாழ விரும்புவதாக அறிவித்தனர். அதற்கு, ராணி இரண்டாம் எலிசபெத்தும் அனுமதி வழங்கினார்.

இந்நிலையில் ஹாரி-மேகன் தம்பதியினரின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “மார்ச் இறுதியுடன் ஹாரி-மேகன் தம்பதியரின் அரச குடும்ப வாழ்க்கை முறைப்படி முடிவடைகிறது. அவர்கள், ஏப்ரல் 1 முதல், ராணியின் சார்பில் எந்தவொரு அரச குடும்ப பொறுப்பையோ, பணிகளையோ மேற்கொள்ள மாட்டார்கள்.

அத்துடன் ‘அரசப் பரம்பரை’ என்ற அடைமொழியையும் பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் துவக்கவுள்ள, தொண்டு நிறுவனத்திற்கும் இது பொருந்தும்” என்றார்.

இதையடுத்து, ஹாரி-மேகன் தம்பதியின் இன்ஸ்டகிராம், புதிய வலைதளம் மற்றும் பல்வேறு வர்த்தகங்களில் பயன்படுத்தும் அரச பரம்பரையை குறிக்கும் அடைமொழி விரைவில் நீக்கப்படும் என தெரிகிறது.