ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியலாளர் அவி லோப், 2017 ம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக, விண்வெளியில் ஒரு வேற்று கிரக பொருள் வந்து சென்றதாக கூறியுள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் அவி லோப் எழுதியுள்ள, ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட நிலப்பரப்பு : பூமிக்கு அப்பால் நவீன வாழ்க்கையின் முதல் அடையாளம்’  (‘Extraterrestrial: The First Sign of Intelligent Life Beyond Earth’ ) என்ற புத்தகத்தில், பூமிக்கு வெளியே ஒரு நவீன வாழ்க்கையின் அடையாளமாகவே இந்த பொருள் விளங்குகிறது என்று கூறியுள்ளார்.

“சூரிய மண்டலத்தின் ஊடாக ஒரு பொருள் உயரத்தில் மிக விரைவாக நகர்ந்து வருவது என்பது மற்றொரு நட்சத்திரத்தில் இருந்து வரும் பொருளால் மட்டுமே முடியும்” என்று ஹவாய் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

“நாசாவால் 11/2017 யூ-1 ‘ஓமுவாமுவா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பொருள் மற்றொரு விண்மீனில் உள்ள ஏலியன்களால் பூமிக்கு அனுப்பப்பட்ட சிறிய விண்வெளி குப்பை” என்று லோப் கூறியுள்ளார், இவரின் புத்தகம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.

புத்தகத்தின் வெளியீட்டாளர் ஹக்டன் மிஃப்ளின் ஹர்கார்ட் (எச்.எம்.எச்) கருத்துப்படி, “ஏலியன்களால் உருவாக்கப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஒரு பகுதிதான் இந்த பொருள் என்பதை கற்பனை செய்து பார்ப்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது” என்று கூறினார்.

நாசா கூற்றுப்படி, அக்டோபர் 19, 2017 அன்று கண்டுபிடிக்கப்பட்ட, 11/2017 யூ-1 ‘ஓமுவாமுவா’ என்பது நமது சூரிய மண்டலத்தை பார்வையிட வந்த முதல் விண்மீன் பொருளாகும்.

பூமிக்கு அருகில் வரும் பொருளை ஆய்வு செய்யும் நாசாவின் என்.இ.ஓ.ஓ. (NASA’s Near-Earth Object Observations, NEOO) திட்டப்படி ஹவாய் பல்கலைக்கழகத்தின் பான்-ஸ்டார் ஆர்எஸ் 1 தொலைநோக்கி மூலம் இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

பூமியின் சுற்றுப்புறத்தில் உள்ள சிறுகோள்கள் மற்றும் வால்நட்சத்திரங்களை கண்டுபிடித்து கண்காணிப்பதே இந்த என்.இ.ஓ.ஓ. திட்டம்.

முதலில் ஒரு வால்நட்சத்திரமாக வகைப்படுத்தப்பட்ட ‘ஓமுவாமுவா’, செப்டம்பர் 9, 2017 அன்று சூரியனை, ஒரு மணி நேரத்திற்கு 196,000 மைல்கள் (வினாடிக்கு 87.3 கிலோமீட்டர்) என்ற நினைத்துகூட பார்க்க முடியாத அசுர வேகத்தில் கடந்தபோது, அது வால் நட்சத்திரத்தின் செயல்பாட்டிலிருந்து மாறுபட்டது என்று உணரப்பட்டது.

எந்தவொரு நட்சத்திர அமைப்புடனும் இணையாமல் பால்வெளி விண்மீன் வழியாக இந்த விண்வெளி பொருள் நம் கண்ணில் தென்படுவதற்கு முன் பல கோடி ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறது என்று நாசாவின் ஆராய்ச்சி கூறுகிறது.

“அண்டவெளியில் சுற்றித்திரியும் இதுபோன்ற விண்மீன் பொருள்கள் குறித்து பல தசாப்தங்களாக ஆய்வு நடத்திவரும் விஞ்ஞானிகள், முதன்முறையாக நவம்பர் 2017 ல் அதற்கான நேரடி ஆதாரங்களை கண்டுபிடித்தனர்” என்று வாஷிங்டனில் உள்ள நாசாவின் அறிவியல் மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் சுர்பூச்சென் கூறியிருக்கிறார்.

பேராசிரியர் அவி லோபின் இந்த புத்தகம் “நமது எதிர்கால வெற்றிக்கு விஞ்ஞான ஆர்வம் முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது” என்று 23-அண்ட்-மீ இன் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான அன்னே வோஜ்சிக்கி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், பூமிக்கு அருகில் ஏலியன்களால் உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட தொழில்நுட்பத்தின் அடையாளத்தை நாம் கண்டிருப்பது, இது குறித்து நாம் மேலும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற வேட்கையை அதிகரித்துள்ளதாக, வோஜ்சிக்கி குறிப்பிட்டுள்ளார்.