டெல்லி

புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்த , பொருளாதார நிபுணர்களை கிண்டல் செய்வது இந்தியாவை தனிமைப் படுத்திவிடும் என ஹார்வர்ட் பல்கலை கழக மாணவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஹார்வர்டில் படித்த நிபுணர்கள் மோடியின் அமைச்சரவையிலும், பிரதமர் அலுவலகத்திலும் பணியாற்றி வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் உள்நாட்டு பொருளாதார உற்பத்தி வீழ்ச்சி அடைந்திருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி கடந்தவாரம் உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஹார்வர்டிலும் ஆக்ஸ்வேர்டிலும் படித்த சில மேதைகள்  உயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவிதம் வீழ்ச்சி என்றும் 4 சதவித வீழ்ச்சி என்றும் கூறிவருகிறார்கள். ஆனால் ஹார்வர்ட் சிந்தனையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், உழைக்கும் மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் நாடு பார்த்துக்கொண்டுதான் உள்ளது என்று மோடி கூறினார்.

பிரதமர் இவ்வாறு கூறியிருப்பதை கண்டித்து  ஹார்வர்டில் படித்துவரும் பஞ்சாப் மாநிலம்  சண்டிகரைச் சேர்ந்த பிரதீக் கன்வால் என்ற மாணவர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், புகழ்பெற்ற கல்விநிறுவனங்களையும் அங்கு படித்தவர்களையும் கிண்டல் செய்வதா என அந்த மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாட்டின் முன்னேற்றம் கருதி பல்வேறு மாறுபட்ட கருத்துகள் பேசப்படும். பொருளாதார நிபுணர்களையும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களையும் கேலி செய்வது நம்மை உலகநாடுகளிலிருந்து விலக்கிவைக்கும் என்றும் மாணவர் கன்வால் தெரிவித்துள்ளார்,  மேலும் அந்த கடிதத்தில், படித்துவிட்டு இந்தியா வரவிரும்பும் தங்களை போன்றவர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்