சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கதிர் அறுக்கும் அரிவாள்: விவசாயம் செழிக்குமா?

திருப்பூர்:

பிரபலமான சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் உள்ள  ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தற்போது கதிர் அறுக்கும் அரிவாள் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு விவசாயம் செழிப்படையும் என நம்பப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை மீது சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவுப்பெட்டி என்ற ஒரு கண்ணாடி பெட்டி ஆண்டாண்டு காலமாக உள்ளது. இதனுள் அவ்வப்போது, சில பொருட்களை வைக்கப்பட்டு பூஜிப்பது வழக்கம். இவ்வாறு வைக்கப்படும் பொருட்கள் காரணமாக, நாட்டில் நல்லது கெட்டது நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

இந்த பெட்டியில் என்ன பொருள் வைக்க வேண்டும் என்பதை, சிவன்மலை ஆண்டவன் தனது பக்தர்கள் யாராவது ஒருவர் கனவில் வந்து குறிப்பிடுவதாகவும், அதைத்தொடர்ந்தே அந்த பொருள் ஆண்டவன் பெட்டிக்குள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுவது வழக்கம்.

ஏற்கனவே,  ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்பட ஏராளமான பொருட்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை செம்மன் வைக்கப்பட்டு பூஜைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது  3 கதிர் அரிவாள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இதன் தாக்கம் என்ன என்பது போகப்போகத்தான் தெரியும் என்றும்,  கதிர் அரிவாள் வைக்கப்பட்டுள்ளதால், விவசாயம் இந்த ஆண்டு செழிப்பாக நடைபெறும் என்றும் ஒருசாரார் நம்பிக்கை கொண்டுள்ளனர்.