சண்டிகர்:

பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப் பட்டது.

அரியானா மாநிலத்துக்கு வரும் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, முக்கிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி இருக்கின்றன. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

எனவே, ஆட்சியை தக்க வைக்கும் முயற்சிகளில் பாஜக தீவிரமாக இறங்கி இருக்கிறது. பல்வேறு தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணங்களையும் வடிவமைத்து உள்ளது. அம்மாநிலத்தில், நேற்றைய தினம் அக்கட்சியின் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப் பட்டிருந்தது.

பதேஹாபாதில் உள்ள தோஹானா, சிர்சாவில் உள்ள எலீனாபாத், ஹிசாரின் நா்னௌந்த் ஆகிய தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால், அந்த பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

அமித் ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் சிர்சா தொகுதி எம்பி சுனிதா டக்கல் கூறியதாவது:

கட்சித் தலைவா் அமித் ஷாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே, அரியானாவில், 3 தோ்தல் பிரசாரக் கூட்டங்களிலும் அவா் கலந்து கொள்ள வில்லை.

அவருக்கு பதிலாக, மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் உள்பட மற்ற மூத்த தலைவா்கள் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். இருப்பினும், நாளை அரியானாவில் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொள்வார் என்றார்.