சண்டிகர்: அரியானாவில் 75 சதவீதம் தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.
இந்த வரைவு மசோதா அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள் சபை முன் வைக்கப்படும். பாஜக கூட்டணி கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜன்நாயக் ஜனதா கட்சி, தேர்தல்களில், முக்கியமாக தனியார் துறை வேலைகளில், மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்திருந்தது.
அதன்படி தனியார் துறைகளில் 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம், உள்ளூர் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனையை முன்னுரிமையாக வைத்து, ‘ஹரியானா மாநில உள்ளூர் மக்களுக்கன வேலைவாய்ப்பு மசோதா, 2020’ மசோதாவை தயாரிக்கும் முன்மொழிவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் வேலைவாய்ப்பு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரியானா மாநில இளைஞர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று துஷ்யந்த் கூறியுள்ளார்.
இது குறித்து சவுதாலா கூறியதாவது: அரியானாவின் இளைஞர்களுக்கு ஒரு வரலாற்று நாள், ஏனெனில் இப்போது தனியார் துறை தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் அரியானாவின் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைகளை வழங்குவது கட்டாயமாக இருக்கும் என்றார்.