ஹரியானாவில் சண்டிகரை விட பெரிய நகரம் உருவாக்க அரசு திட்டம்

சண்டிகர்:

சண்டிகரை விட பெரிய நகரம் ஒன்றை உருவாக்க ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது.

ஹரியானா மாநில தலைநகரான சண்டிகரை விட ஒரு பெரிய அளவிலான நகரத்தை உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. குர்கானுக்கு அடுத்தபடியாக இந்த நகரத்தை தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் உருவாக்கப்படவுள்ளது.

இதற்கான ஆலோசகரை நியமிக்கும் பணி அம்மாநில தொழிற்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட அறிக்கை 6 மாத காலத்திற்குள் தயாரிக்கப்படவுள்ளது.

இந்த கழகத்தின் கூடுதல் மேலாண் இயக்குனர் நர்ஹரி பங்கர் கூறுகையில்,‘‘ உலக தரத்திலான நகரமாக இது இருக்கும். கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விதமான உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளடக்கியதாக இருக்கும். இதற்காக ஒரு இஞ்ச் நிலம் கூட கையகப்படுத்தமாட்டோம்’’ என்றார்.

குறைந்தபட்சம் 50 ஆயிரம் ஹெக்டேரில் இந்த நகரம் அமையவுள்ளது. சண்டிகரின் பரப்பளவு 11,400 ஹெக்டேர் மட்டுமே. ஆனால், குர்கான் பரப்பளவான 73,200 ஹெக்டேரை விட குறைவானதாகும். இந்த நகரம் டில்லிக்கு தென் பகுதியும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்படவுள்ளது.