ராஜஸ்தான் ஆழ்வார் கொலை: ரக்பர்கான் குடும்பத்துக்கு அரியானா அரசு 8 லட்சம் நிதிஉதவி

சண்டிகர்:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராஜஸ்தான் ஆழ்வாரில் ரக்பர்கான் என்ற வாலிபர் பசுவை கடத்தியதாக, பசு பாதுகாவலர்கள் என்ற வன்முறை கும்பலால்  கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அரியானா அரசு ரக்பர்கான் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது.

பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட ரக்பர்கான்

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் உள்ள லாலாவாண்டி காட்டுப் பகுதியில் பசுக்களை கடத்தியதாக கூறி ரக்பர்கான் என்ற வாலிபர் சமீபத்தில் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ரக்பர்கான் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக்கொண்டிருந்தபோது,  அங்கு வந்த ராம்நகர் போலீசார் அடிபட்டவரை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தாமல், பசுக்களை பாதுகாப்பதிலும், அவற்றை கோசாலைக்கு அனுப்புவதிலுமே கவனம் செலுத்தினார்.

சுமார் 4 மணி நேரம் காயத்துடன் துடித்துக்கொண்டிருந்த அக்பர்கான் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். காவல்துறையினரின் மனிதாபிமானமற்ற இந்த செயல் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக இன்று பாராளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி கரன் சிங் யாதவ் கேள்வி எழுப்பினார். இதன் காரணமாக பாராளுமன்றத்திலும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ராஜஸ்தான் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோடி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மரணம் அடைந்த ரக்பர்கான் குடும்பத்துக்கு அரியானா மாநில அரசு ரூ.8 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளது.

இரண்டு காசோலைகளாக வழங்கி உளள அரியானா அரசு, ஒரு காசோலையில் ரூ.5 லட்சமும், மற்றொரு காசோலையில் ரூ.3 லட்சம் ஆக மொத்தம் 8 லட்சத்துக்கான காசோலை வழங்கி உள்ளது.

5 லட்சம் ரூபாய் காசோலையை  புன்ஹானா மாவட்ட நீதிபதியும், 3 லட்ச ரூபாய் காசோலையை மாநில அமைச்சர் ரஹிஸ்கான் ஆகியோர் ரக்பர்கான் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

2014 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2018 மார்ச் 3 வரை 9 மாநிலங்களில் 40 சம்பவங்களில்  45 பேர் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.