ஹரியானா அரசு உடற்பயிற்சி நிலையங்கள் ஆர்எஸ்எஸ் கிளைகளாக செயல்படும்,…..பாஜக அமைச்சர்

சண்டிகர்:

கிராமங்கள் தோறும் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உடற்பயிற்சி நிலையம் (ஜிம்) அமைக்கும் திட்டத்தை ஹரியானா அரசு செயல்படுத்தி வருகிறது. இங்கு யோகா, மல்யுத்தம், வாலிபால், கபடி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு பயிற்சி பெறலாம். மாநில அரசின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆயிரம் ஜிம்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு இது வரை 300 ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் பஞ்ச்குலாவில் ஜிம் திறப்பு விழா நடந்தது. இதில் வேளாண் துறை அமைச்சர் ஓள் பிரகாஷ் தன்கார் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ இந்த ஜிம்கள் ஆர்எஸ்எஸ்.ன் பிரிவாக செயல்படும்’’ என்றார். ஏற்கனவே ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மனோகர் பால் கத்தார் தலைமையிலான பாஜக அரசு மாநிலத்தில் அமல்படுத்தி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் அமைச்சர் தன்காரின் பேச்சு எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் உள்ளது. தன்காரின் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தன்காரின் இந்த கருத்து குறித்து அம்மாநில கல்வி துறை அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா கூறுகையில், ‘‘ஆம், இந்த ஜிம்கள் ஆர்எஸ்எஸ்.ன் பிரிவாகவும் பயன்படுத்தப்படும்’’ என்றார். தன்காரின் கருத்துக்கு அவரது சக அமைச்சர் ஒருவர் உடனடியாக ஆதரவு தெரிவித்தார்.

உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் கரன் தேவ் கம்போஜ் கூறுகையில்,‘‘இந்த ஜிம்களை ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் உடற்பயிற்சி மேற்கொள்ள மற்றும் விளையாடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்.