டெல்லி: கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் 3ம் கட்ட சோதனைக்காக தன்னார்வலராக பதிவு செய்து கொண்ட அரியானா மாநில அமைச்சர் அனில் விஜ்ஜூக்கு மருந்து செலுத்தப்பட்டது.

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். ஐதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆருடன் இணைந்து கோவாக்சின் என்ற தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பு மருந்தின் 2 கட்ட சோதனைகள் முடிந்துவிட்டன. இந்த சோதனைகளில் நாடு முழுவதும் 26,000 தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள் என்று பாரத் பயோடெக் அறிவித்திருந்தது. அதன்படி 3ம் கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.

அதற்கென நாடு முழுவதும் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக அரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ்  தம்மை தன்னார்வலராக பதிவு செய்திருந்தார்.

இந் நிலையில் அரியானாவில் இந்த தடுப்பு மருந்தின் 3ம் கட்ட சோதனை தொடங்கியது. அறிவித்தபடி தன்னார்வலராக பதிவு செய்து கொண்ட அமைச்சர் அனில் விஜ்ஜூக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. முதல் தன்னார்வலராக தடுப்பூசியை அவர் செலுத்திக் கொண்டார்.