அரியானா,

ஜாட் அமைப்பு, பாஜக பேரணியால் அரியானாவில் பதற்றம் மான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக 11 மாவட்டங்களில் செல்போன் சேவைகளை மாநில அரசு முடக்கி உள்ளது.

 

அரியானாவில் நாளை  ஜாட் சமுதாயத்தைச் சேர்ந்த யாஷ்பால் மாலிக் தலைமையிலான அகில இந்திய ஜாட் ஆராக்ஷன் சங்கார்ஸ் சமிதி அமைப்பின் சார்பாக பேரணி நடைபெற உள்ளது.

இந்த அமைப்பின் சார்பாக ரோஹ்டாக் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள பயிற்சி நிறுவன அடிக்கல் நாட்டு விழாவிற்காக யாஷ்பால் பால் மாலிக் தலைமையில் பேரணி செல்ல உள்ளனர்.

அரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தில் பாஜக எம்பி ராஜ்குமார் சைனி தலைமையில், ஜாட் சமுதாய மக்கள் அரசு வேலையில் இட ஒதுக்கீடு கோருவதை எதிர்த்து பேரணி நடக்க உள்ளது.

இந்த இரு பேரணிகள் காரணமாக அரியானாவில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதவாறு மாநிலம் முழுவதும் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, பேரணி நடக்கும் பகுதிகளை சுற்றி உள்ள 11 மாவட்ட பகுதிகளில், செல்போன் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு எந்த செல்போன் சேவையும் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக நாளை என்ன நடக்குமோ என பதற்றமான சூழலில் அரியானா மக்கள் தவித்து வருகிறார்கள்.