டில்லி:

ரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க துஷ்யந்த் சவுதலா ஆதரவு வழங்கி உள்ள நிலையில், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று திகாரில் அடைக்கப்பட்டுள்ள  அவரது தந்தையான அஜய் சவுதலா இரு வார பரோலில் வெளியே வருகிறார். இன்று மாலை அல்லது நாளை சிறையில் இருந்து வெளி வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டின் துணை பிரதமராக இருந்தவர் தேவிலால். அவரது மகன் ஓம்பிரகாஷ் சவுதாலா. அரியானா முதல்வராக பதவி வகித்தவர். அவரது ஆட்சிகாலத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக நடைபெற்ற வழக்கில், ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோர் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அஜய் சவுதாலா மகன்தான் துஷ்யந்த் சவுதாலா.  தற்போது நடைபெற்ற அரியான மாநில தேர்தலில் அவரது கட்சி 10 இடங்களை பிடித்துள்ள நிலையில், எந்தவொருகட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளது.

தேவிலால் பேரன்களில் ஒருவரான துஷ்யந்த் சவுதாலா, ஜேஜேபி எனும் தனிக்கட்சியை தொடங்கிய கையோட் உசான கலான் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு பாஜகவின் பிரேம் லதாவை 47,452 வாக்குகள் வித்தி யாசத்தில் தோற்கடித்தார். அதுபோல, துஷ்யந்த் சவுதாலாவின் தாயார் நய்னா சவுதாலா, பத்ரா தொகுதியில் போட்டியிட்டார். அவர் முன்னாள் முதல்வர் பன்சிலால் மகன் ரன்பீர் மகேந்திராவை 13,704 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு ஆதரவு தருவது தொடர்பாக  நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷா வுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, துஷ்யந்த் சவுதலாவுக்கு துணைமுதல்வர் பதவி வழங்க பாஜக சம்மதம் தெரிவித்து உள்ளது. அத்துடன், தனது தந்தையான அஜய்சவுதலாவை திகாரில் இருந்து வெளியே வர உதவி கோரியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அஜய் சவுதலாவுக்கு இரண்டு வாரம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று மாலை அல்லது நாளை காலை அவர் திகாரில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.