டெல்லி:

கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்வை பிரதமர் மோடி வெளியிட்டார். அன்று முதல் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தவும், எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முன்னதாக அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டது.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டவுடன் பெரும்பாலான கருப்பு பணம் ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை வருமான வரித் துறை முடுக்கிவிட்டது. இந்த வகையில் ஜன்தன் கணக்குகளில் அதிகளவு டெபாசிட் செய்ததில் ஹரியானா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ரூ. 780 கோடி வரை இங்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாநிலம் ரூ. 500 கோடியுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் ரூ. 67 கோடியும், ஜம்மு காஷ்மீரில் ரூ. 88 கோடியும், சண்டிகரில் 18 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளின் கண க்குகளிலும் டெபாசிட் செய்யப்பட்டதை வருமான வரித் துறை கணக்கெடுத்தபோது இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.

45 நாட்களில் நூறு சதவீதம் அதிகமாக சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாய் ஜன் தன் வங்கி கணக்குளில் டெபாசிட் செய்யப்பட் டுள்ளது. ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ. 50 ஆயிரம் வரை டெபாசிட் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் கருப்பு பணத்தை பலர் ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நவம்பர் 8ம் தேதிக்கு முன்பு ஹரியானாவில் ரூ.1,567 கோடியாக இருந்த டெபாசிட், தற்போது ரூ. 2,349 கோடியாக உயர்ந்துள்ளது. பஞ்சாப்பில் 1,373 கோடியாக இருந்த டெபாசிட் தற்போது 1,872 கோடியாக உயர்ந்துள்ளது. சண்டிகரில் ரூ. 70 கோடியாக இருந்த டெபாசிட் தற்போது ரூ. 88.9 கோடியாக உயர்ந்துள்ளது. ஜனவரி 25ம் தேதி வரை இந்த தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.