சண்டிகார்:

ஹரியானா மாநிலத்துக்கும் தென்னிந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது வரலாற்று நிகழ்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.


கடந்த வாரம் ஹரியானாவில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தமிழில் பேசினார்.

அப்போது அவர், தாம் தமிழகத்தில் பணியாற்றியபோது, தமிழ் கற்றுக் கொண்டதாக தெரிவித்தார். தமிழுக்கும் ஹரியானாவுக்கும் நீண்ட தொடர்பு இருந்தது குறித்து அவர் கூறும்போது, 2010 வரை ஹரியானாவின் இரண்டாவது மொழியாக தமிழ் இருந்ததாக தெரிவித்தார்.

தமிழை நாங்கள் படித்து வந்த அதேநேரத்தில், கடந்த 50 ஆண்டுகளாக ஹரியானாவுக்கும் தெலுங்கு மொழிக்கும் தொடர்பு இருந்தது. மாநிலத்தின் இரண்டாவது மொழியாக தெலுங்கும் இருந்தது.
அதிகாரப்பூர்வ மொழியாக இல்லாவிட்டாலும், பள்ளிகளில் தெலுங்கு மொழி கற்பிக்கப்பட்டது என்றார்.

தென்னிந்திய மொழிகளை ஹரியானா நேசித்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.
1966-ம் ஆண்டு பஞ்சாபில் இருந்து ஹரியானா பிரிந்தபோது பிரச்சினையோடுதான் பிரிந்தது.

இன்னும் இரு மாநிலங்களுக்கிடையே நதி நீர் பங்கீட்டில், கல்வியில், விமான நிலையத்தில், இரு மாநிலங்களுக்கும் ஒரே தலைநகராக சண்டிகார் இருப்பதிலும் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பஞ்சாபி மொழி ஹரியானாவுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவே தென்னிந்திய மொழிகளை ஹரியானாவில் அப்போதையே அரசியல்வாதிகள் வளர்த்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

1969-ம் ஆண்டு தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த சமயம். அப்போது ஹரியானாவில் முதல்வராக இருந்த பன்சிலால், பஞ்சாபி மொழி முதல் மொழியாகிவிடக் கூடாது என்பதற்காக, தென்னிந்திய மொழியை இரண்டாவது மொழியாக ஆக்கினார்.

மேலும் இந்தி எதிர்ப்பை சமாளிக்க, இந்தி பேசும் தமது மாநிலத்தில் தெலுங்கு மொழியை இரண்டாவது மொழியாக்கினார் என்று கூறுகிறார்கள் ஹரியானா அரசியல்வாதிகள்.