சொந்தக்கட்சி எம்.பிக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி கூட்டத்தை ரத்து செய்த அமித்ஷா

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை அக்கட்சியின் தலைமை அடுத்தடுத்து இரு முறை எந்த காரணமும் சொல்லாமல் ரத்து செய்துள்ளது. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள எதிர்விளைவுகளைக் குறித்து எம்.பிக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிடும் என்ற பயமே காரணம் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

modi_amitshah

கடந்த புதனன்று நடக்கவிருந்த ஒரு எம்.பிக்கள் கூட்டமும், வெள்ளியன்று நடக்கவிருந்த இன்னொரு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. அக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு எந்த காரணத்தையும் கட்சித்தலைமை தெரிவிக்கவில்லை. எம்.பிக்கள் அரசின் ரூபாய் நோட்டு தடைக்கு எதிராக தங்கள் குரலை உயர்த்தலாம் என்ற பயத்தில் அக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.

வெள்ளிகிழமை நடப்பதாக இருந்த கூட்டம் அரசின் ரூபாய் நோட்டு தடை குறித்து எழும்பும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்த பவர் பாயிண்ட் வகுப்பாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது பின்பு ரத்து செய்யப்பட்டது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் போர்பந்தர் பாஜக எம்பி பிரதமரின் ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையை வெளிப்படையாகவே விமர்ச்சித்திருக்கிறார். அதுபோல வேறு சில உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு மனநிலையில் இருக்கலாம் எனவே தற்போதைக்கு எந்த கூட்டமும் நடத்த வேண்டாம் என்று பிரதமர் மோடியும், பாஜக கட்சியின் தலைவர் அமித்ஷாவும் கருதுவதாக தெரிகிறது.