மாதம் ரூ.15 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும்: கிரிக்கெட் வீரர் ஷமி மீது மனைவி வழக்கு

--

டில்லி:

கிரிக்கெட் வீரர் ஷமி மாதந்தோறும் ரூ. 10 லட்சம் தர வேண்டும் என அவரது மனைவி ஹாசின் ஜஹான் அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு,  இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளருமான முகம்மது ஷமி மீது அவரது மனைவி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். ஷமி  அதிக பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனை தட்டி கேட்டதால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் ஷமியின் மனைவி ஹாசின் ஜகான் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், கார் விபத்தில் காயமடைந்த முகமது ஷமியை காண சென்ற ஹாசின் ஜகான், தன்னை ஷமி மிரட்டடுவதாகவும், ஆனாலும், அவர்  விரைவில் குணமடைய வேண்டும் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் ஷமி மீது காவல்துறையினர், மனைவி ஹாசின் ஜஹான் புகார் அடிப்படையில், 7 பிரிவுகளில், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேவேளையில் ஷமி மீதான புகார் குறித்து விசாரணை நடத்திய பிசிசிஐ ஷமியின் மனைவி ஹாசின் ஜகான் கூறிய புகாரில் எந்தவித  முகாந்திரமும் இல்லை என கூறியது.

இதன் காரணமாக இந்த பிரச்சினை முடிவு பெற்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில்,  அலிப்பூர்  மாவட்ட நீதிமன்றத்தில் ஹாசின், ஷமியிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்தார்.

தன்னையும், தன் மகளையும் பராமரிக்க மாதம் ரூ.15 லட்சம் ஜிவனாம்சம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஷமிக்கு இது பெரிய தொகையல்ல என்றும் அந்தமனுவில் கோரி உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த 15 நாட்களுக்குள் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர்  நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.