ஜெய்தேவ் உனத்கட் அதிரடி ஹாட்ரிக்: புனே அணி வெற்றி!

Hat-trick boy Jaydev Unadkat promises another magical spell against Delhi Daredevils

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான லீக் ஆட்டத்தின் கடைசி ஓவரில், ஜெய்தேவ் உனத்காட் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் அடுத்தடுத்து 3 விக்கெட் வீழ்த்தியதால் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணி 12 ரன் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

 

ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீசியது. ரகானே, திரிபாதி இருவரும் புனே சூப்பர்ஜயன்ட் இன்னிங்சை தொடங்கினர். திரிபாதி 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் பிபுல் ஷர்மாவின் துல்லியமான த்ரோவில் ரன் அவுட்டானார்.  அடுத்து ரகானேவுடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். ரகானே 22 ரன்னில் வெளியேற, ஸ்மித் – ஸ்டோக்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 60 ரன் சேர்த்தது. ஸ்டோக்ஸ் 39 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரஷித் சுழலில் கிளீன் போல்டானார். நிதானமாக விளையாடிய ஸ்மித் 39 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். கிறிஸ்டியன் 4 ரன், திவாரி 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டோனி 31 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விடைபெற்றார். ஷர்துல் தாகூர் டக் அவுட்டானார். புனே சூப்பர்ஜயன்ட் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. சுந்தர் 1, உனத்காட் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் சித்தார்த் கவுல் 4, ரஷித், பிபுல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. கேப்டன் வார்னர், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். தவான் 19 ரன், கேன் வில்லியம்சன் 4 ரன் எடுத்து ஸ்டோக்ஸ் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த நிலையில், வார்னர் – யுவராஜ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 54 ரன் சேர்த்தது.
வார்னர் 40 ரன் (34 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஸ்டோக்ஸ் வேகத்தில் தாகூர் வசம் பிடிபட்டார். ஹென்ரிக்ஸ் 4 ரன் எடுத்து தாஹிர் சுழலில் கிளீன் போல்டாக, யுவராஜ் சிங் 47 ரன் (43 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி உனத்காட் வேகத்தில் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நமன் ஓஜா 9 ரன் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது.

பரபரப்பான நிலையில் உனத்காட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. அடுத்த 3 பந்தில் பிபுல் ஷர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் வரிசையாக விக்கெட் தானம் செய்து அணிவகுப்பு நடத்தினர். ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியதுடன் அந்த ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் அமர்க்களப்படுத்தினார் உனத்காட். ஐதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கவுல், நெஹா ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். புனே பந்துவீச்சில் உனத்காட் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 5 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஸ்டோக்ஸ் 3, தாஹிர் 1 விக்கெட் வீழ்த்தினர். புனே அணி 12 போட்டியில் 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறியது.

 

அபாரமாக பந்துவீசிய புனே அணியின் ஜெயதேவ் உனத்கட், ஐ.பி.எல்., அரங்கில் முதன்முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இது, இந்த சீசனில் பதிவான 3வது ‘ஹாட்ரிக்’. இதற்கு முன், பெங்களூரு அணியின் சாமுவேல் பத்ரீ (எதிர்-மும்பை), குஜராத்தின் ஆன்ட்ரூ டை (எதிர்-புனே) இச்சாதனை படைத்திருந்தனர்.

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Hat-trick boy Jaydev Unadkat promises another magical spell against Delhi Daredevils
-=-