லண்டன்: OpIndia என்ற வலதுசாரி இணையதளத்தில் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது ‘ஸ்டாப் ஃபண்டிங் ஹேட்’ என்ற பிரச்சார அமைப்பு.
இந்த அமைப்பு லண்டனில் செயல்பட்டு வருகிறது. வெறுப்பு எண்ணங்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் விற்பனை நிலையங்கள் மற்றும் பப்ளிகேஷன்களை ஆதரிக்கக்கூடாது என்று விளம்பரதாரர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துவரும் அமைப்பாகும் இது.
இந்த அமைப்பின் இயக்குநர் ரிச்சர்ட் வில்சன் கூறியதாவது, “தனது வெறுப்புமிக்க மற்றும் பாரபட்சமான செயல்பாடுகளால் OpIndia உலகளவில் மோசமான ஒரு இணையதளமாக அறியப்படுகிறது. எனவே, முக்கியமான விளம்பர நிறுவனங்கள், OpIndia இலிருந்து விலகியிருப்பதை உறுதிச‍ெய்ய விரும்புகிறோம்.
சமீபத்தில், முஸ்லீம்களை பணிக்கு அமர்த்தாத முஸ்லீம் அல்லாதோர், விளம்பரம் செய்யும் உரிமை உள்ளவர்கள் என்ற ஒரு செய்தியை OpIndia வெளியிட்டதை உறுதி செய்தோம். அதன்பொருட்டு எங்களின் பிரச்சாரத்தை மேற்கொண்டோம்” என்றார்.