உ.பி.யில் உயர்ஜாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த தலித் இளம்பெண்ணின் உடல் அதிகாலையில் தகனம்… பரபரப்பு..

லக்னோ: உ.பி.யில் உயர்ஜாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த தலித் இளம்பெண்ணின் உடல் அதிகாலையில், காவல்துறை யினரால் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் உள்பட அந்த பகுதி மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கடந்த14 ஆம் தேதி  உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலை செய்து வந்த 19 வயதான பெண் ஒருவரை 4 பேர் கொண்ட உயர்ஜாதி கும்பல், தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. தொடர்ந்து அவரது நாக்கு அறுக்கப்பட்டதுடன், கடுமையாக தாக்கப்பட்டு, ரோட்டில் வீசப்பட்டார். அந்த இளம்பெண் மீட்ட அந்த பகுதி மக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால்,  சிகிச்சை பலனளிக்காமல் அவர்  நேற்று உயிரிழந்தார். இநத் சங்மபவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்த பெண்ணின் பெற்றோர், தனது பெண்ணின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன்,  உ.பி. காவல்துறை தங்களுக்கு உதவி எதுவும் செய்யவில்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில்,  இளம்பெண்ணின் சாவுக்கு நீதி வேண்டும் என போராடிய பெற்றோர், உடலை வாங்க மறுத்து வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அந்த இளம்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹத்ராஸ் காவல்துறை அதிகாரி, இளம்பெண்ணின் குடும்பத்தின் அனுமதியின்றி இறுதி சடங்கு நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. இரவில் இறுதிச் சடங்குகளை நடத்த தந்தை & சகோதரர் ஒப்புதல் அளித்தனர். இறுதி சடங்கில் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்டவரின் உடலை ஏற்றிச் செல்லும் வாகனம் கிராமத்தில் காலை 12:45 மணி முதல் 2:30 மணி வரை இருந்தது. அதன்பிறகே தகனம் செய்யப்பட்டு என்று விளக்கம் அளித்துள்ளார்.