சென்னை: பணி நியமன முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலை. துணைவேந்தர்  சூரப்பா மீதான புகார்கள் குறித்து நாளை முதல் நேரடியாக புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், புகார் கொடுத்தவர்களுக்கு அடுத்த வாரம் நோட்டீஸ் அனுப்பி விசாரணை  நடத்தப்படும் என்று நீதிபதி கலையரசன் அறிவித்து உள்ளார்.


அரியர் தேர்ச்சி விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக அரசுக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. அதுமட்டுமில்லாமல் சூரப்பா மீது பணி நியமன முறைகேடு உள்பட பல ஊழல் புகார்களும் எழுந்தன. இதனால் சூரப்பாவை தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்த தமிழகஅரசு, அவர்மீதான , புகார்கள் குறித்து விசாரிக்க கடந்த 11ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை நியமித்தது. அந்த குழுவின் பரிந்துரையின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து  சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் விசாரணை நடைபெறுகிறது. சூரப்பா மீதான ஊழல், முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை தொடங்கி உள்ளது.  துணைவேந்தர் சூரப்பா மீது ரூபாய் 700 கோடி ஊழல் புகார் மற்றும் முறைகேடான பணி நியமனங்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததன் காரணமாக குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை ஆராய்யும் முயற்சியில், நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு சூரப்பாவிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை முதல் சூரப்பா தொடர்பாக நேரடியாக புகார் கொடுக்கலாம் என்றும், புகார் கொடுத்தவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்றும்   நீதிபதி கலையரசன் அறிவித்து உள்ளார்.