கோவை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இடஒதுக்கீட்டின்படி வார்டு மறுவரையறை செய்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த உச்சநீதிமன்றமே ஆணையிட்டு இருக்கிறது. தீர்ப்பை வரவேற்பதாக சொல்லிவிட்டு, மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்வதாக ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

தேர்தலை தள்ளிப்போடுவதே அவரின் நோக்கம். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது. தேர்தலை சந்திக்க தெம்பு, திராணி இருக்கிறதா என்று திமுகவை கேட்கிறோம்.

அரசின் கஜானா காலியாகிவிட்டதாக 3 ஆண்டுகளாக ஸ்டாலின் கூறி இருக்கிறார்.  விஷமத்தனமாக கருத்துகளை பரப்பி அரசியல் ஆதாயம் தேடும் அவரது முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்றார்.