தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அதிமுக அரசு அமல்படுத்தாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமே நேரில் தெரிவித்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடரின் நேற்றைய விவாதத்தின் போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களும், முதலமைச்சரும் பதிலளித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, “தேசிய குடிமக்கள் பதிவேடு தமிழகத்திற்கு ஒத்துவராது என்றும், அதை அமல்படுத்தமாட்டோம் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேரடியாக தெரிவித்துள்ளோம். அதேநேரம், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு, இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றை அமித்ஷா நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பாக இதுநாள் வரை, மாநிலத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குமாறு அழுத்தம் கொடுத்திருக்கிறோம் என்று கூறி வந்ததோடு, தேசிய மக்கள் பதிவேட்டிற்கும் அனுமதி அளித்துவிட்டு, அதற்கான பயிற்சிகள் ஏப்ரல் முதல் மாநிலத்தில் நடைபெறும் என்றும் அறிவித்து வந்தார். இத்தகைய சூழலில் முதன் முறையாக தன் அரசினுடைய நிலைபாட்டை பகிரங்கமாக முதலமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக திமுக எம்.எல்.ஏ மதிவானன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ”இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இங்கு இருக்கின்றனர். அகதிகளாக இருப்போருக்கு இரட்டை குடியுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா தெரிவித்திருக்கிறார். திமுக செய்யத் தவறியதை நாங்கள் செய்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், திமுக பல ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை பெறுவது குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், மக்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்க 12 ஆண்டுகள் அவகாசம் அளித்தும், திமுக தனது பொறுப்பை கோட்டைவிட்டுவிட்டது என்றும் கூறியதோடு, திமுக – காங்கிரஸ் கூட்டணி அரசால் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடைத்ததா ? என்றும் கேள்வி எழுப்பினார். அத்தோடு, தங்களைப் பொருத்தவரை, அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தங்களின் சித்தாந்தத்திலிருந்து ஒருபோதும் தாங்கள் விலகப்போவது இல்லை என்றும் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் இலங்கை தமிழர்களுக்கும் அதிமுக அரசு வழங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.