இந்த ஆண்டு எத்தனை டாஸ்மாக் மூடப்படும்? : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி தமிழக அரசு இந்த ஆண்டு எத்தனை டாஸ்மாக் கடைகளை மூட உள்ளது என உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் அதிமுக டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என வாக்குறுதி அளித்தது.   அதன்படி 2016ல் 500 கடைகளும் 2017ல் 500 கடைகளும் மூடப்பட்டன.   இந்நிலையில் உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்த போது பல கடைகள் மூடப்பட்டு அவை நகரின் உள்ளே திறக்கப்பட்டன.

அவ்வகையில் சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் திறக்கப்பட்ட கடைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.   அவர்களின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் அடங்கிய அமர்வின் கீழ் விசாரிக்கப் பட்டு வருகிறது.

அப்போது அமர்வு, “மது அருந்துவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம் உள்ளது.   ஏற்கனவே ஒரு தலைமுறை மதுவுக்கு அடிமையாகி விட்டது.   அடுத்த தலைமுறையை காப்பது நீதிமன்றக் கடமையாகும்.    தமிழக இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதை அரசால் தடுக்க முடியவில்லை.   பெரும்பாலான பார்களில் ஆரோக்யமான உணவும் சுத்தமான சூழ்நிலையும் இல்லை.   இதற்கு அரசு நடவடிக்கைகள் என்ன?

அதிமுக அரசு ஒவ்வொரு வருடமும் தேர்தல் அறிக்கைப்படி இரு வருடங்கள் தலா 500 கடைகளை மூடியது.  இந்த ஆண்டு எத்தனை கடைகளை அரசு மூட உள்ளது?   இந்த ஆண்டு தொடங்கி 6 மாதங்கள் கடந்து விட்டது.   இதுவரை எத்த்னி கடைகளை அரசு மூடி உள்ளது?  வரும் ஆறாம் தேதிக்குள் அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும்” என கூறியது.

இந்த வழக்கு ஆறாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.