துரை

சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தசரா விழாக்களில் ஆடல் பாடல் என்னும் பெயரில் ஆபாச நடனம் நடத்த தடை விதித்துள்ளது.

தமிழகக் கோயில்களில் தசரா திருவிழா கொண்டாட்டம் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 1 வரை நடக்க உள்ளது.   தசராவை முன்னிட்டு மாலை முதல் இரவு வரை கோயில்களிலும் தெருக்களிலும் பல இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவது வெகு நாளைய வழக்கம்.   ஆனால் சமீபத்தில் எல்லாக் கோயில் திருவிழாக்களிலும், ஆடல்-பாடல் என்னும் பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்துவது பெருகி வருகிறது.

இதை எதிர்த்து திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்னும் ஊரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்னும் வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிள்ளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

அவர் தனது மனுவில், ”கோயில் திருவிழாக்களில் இது போல ஆபாச நடன நிகழ்ச்சி நடத்துவது பல இந்து மக்களின் மனதை புண் படுத்துகிறது.   பல இடங்களில் காவல்துறையும் இதைக் கண்டுக் கொள்வதில்லை.

இந்த நடனக் குழுவுக்கு அளிக்கும் பணம் கோயிலுக்கு வரும் காணிக்கையில் இருந்து தரப்படுகிறது.  அது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர பயன்படுத்தாமல் இவ்வாறு செலவழிக்கப்படுகிறது. எனவே இதை தடுத்து நிறுத்த உத்தரவிடவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரானா மற்றும் சுவாமிநாதனிடம் ராம்குமார் ஏற்கனவே போலிசில் பதியப்பட்டிருந்த புகார்களின் நகலையும், நடன நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவையும் அளித்தார். குறிப்பாக குலசேகரப்பட்டினம் முத்துமாரியம்மன் கோவிலில் சென்ற ஆண்டு தசரா திருவிழாவில் மாடல்கள், துணை நட்சத்திரங்கள்,  டிவி நடிகைகள் ஆகியோர் கலந்துக் கொண்டு ஆபாச நடனங்கள் ஆடியதை வீடியோ பதிவாக அவர் அளித்திருந்தார்.

நீதிபதிகள், “இனி இது போல ஆபாச நடனங்கள் எந்த ஒரு கோவிலிலும் நடத்தக் கூடாது.  நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்கும் எந்த ஒரு திருவிழாக் குழுவினருக்கும் போலீஸ் அனுமதி தரக்கூடாது.  மக்கள் பலரும் பக்தி எண்ணத்துடன் வரும் இடத்தில் இது போன்ற அபாச நிகழ்ச்சிகள் நடத்துவதை யாரும் பொறுத்துக்கொள்ள முடியாது.  மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தீர்ப்பு அளித்துள்ளனர்.