விஜயவாடா

ந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்த மாநில தேர்தல் ஆணையர் கனகராஜ் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நடந்தது.   அப்போதைய மாநில தேர்தல் ஆணையராக ரமேஷ் குமார் பதவி வகித்து வந்தார். இவர் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ஆளும் கட்சியினர் தொடர்ந்து புகார் எழுப்பினர்.

இதையொட்டி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கனகராஜைத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்தார்.  கனகராஜ் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  ஆனால் இதை எதிர்த்து ரமேஷ் குமார் மற்றும் முன்னாள்  பாஜக அமைச்சர் காமினேனி சீனிவாசன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி  கனகராஜ் தேர்தல் ஆணையராக நியமனம் செய்து அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ரமேஷ்குமாரை மீண்டும் தேர்தல் ஆணையராக நியமித்த உத்தரவு பிறப்பித்தார்.  அது மட்டுமின்றி மாநில தேர்தல் ஆணையர் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் ஆந்திர மாநிலத்தின் உத்தரவையும் ரத்து செய்துள்ளார்.

இந்த தீர்ப்பு ஆந்திர  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.