கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு அமைப்பு

அகமதாபாத்:

கமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், பொது மருந்துகளின் தலைவர் டாக்டர் அமி பரிக் மற்றும் அவசர மருந்துகளின் தலைவர் டாக்டர் அத்வைத் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் அகமதாபாத் மாநகராட்சியைச் சேர்ந்த எஸ்.வி.பி மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள். இவர்களுடன் அகமதாபாத் சிவில் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் பிபின் அமினும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனை மீதான புகார்கள் குறித்து பேசிய உயர் நீதிமன்றம், இந்த நேரத்தில் இந்த புகார்கள் உண்மையானவையா என்பதை தெளிவுப்டுத்த முடியாது. இருந்தாலும், இந்த புகார்களை முக்கியமானதாக எடுத்து கொண்டு, இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் 22 பாயிண்டுகளுடன் கூடிய விரிவான அறிக்கையில், மருத்துவமனைகளில் அஹ்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுபாடு இருந்து வருவதாகவும், இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்றும், நோயாளிகளை நிர்வகிப்பதில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையின் தலைமை நோயாளிகளின் சிறப்பான சிகிச்சை வழங்குவதில் தோல்வியடைந்து விட்டது என்றும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் அளித்த பல புகார்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருக்கின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை கொரோனா அல்லாத அதற்கு இணையான நோய் பாதிப்பால் ஏற்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் சுகாதாரத் திட்டமான எம்.ஏ. யோஜன திட்ட பயனாளிகளுக்கு மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.