கீழமை நீதிமன்றங்களில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை:
கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றமும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் மூடப்பட்டன.

அவசர வழக்குகள் மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் 29 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கீழமை நீதிமன்றங்கள் செயல்பட தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான 7 மூத்த நீதிபதிகள் கொண்ட நிர்வாக குழுவால் அனுமதி அளிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மேற்கொள்ள அனுமதிப்பது என நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு நேரடி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும், சாட்சிகளுக்கும் மட்டும் நீதிமன்றத்துக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெறும் நீதிமன்ற பணிகள் குறித்து மீண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.