‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்…!

செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

ஆனால் திரைப்படம் வெளியாகாமல் நாட்கள் ஓடின. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் நெஞ்சம் மறப்பதில்லை குறித்த உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை மார்ச் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது வேற விளையாட்டு எனத் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.

வருகிற மார்ச் 5-ம் தேதி வெளியாக உள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரை படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.

என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2.42 கோடி கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1.75 கோடி ரூபாய் கடனை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள 1.24 கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், தங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய மீதமுள்ள தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 60 லட்சம் ரூபாயை திரும்பி செலுத்தி விட்டதாகவும், 82 லட்சம் தொகையை வட்டியுடன் வருகின்ற ஜூலை மாதத்திற்கு முன்பு திருப்பி செலுத்த உள்ளதால் படத்திற்கு விதிக்கபட்ட தடையை நீக்க வேண்டும் என்றார்

இதையடுத்து, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீக்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.