சென்னை:

திமுகவினர் வைத்த பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ வழக்கு விசாரணையை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலையின் மத்தியில் வைத்திருந்த அதிமுகவினரின் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வழக்கை சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதிகள், சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர்  அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றனது.

ஏற்கனவே நடைபெற்ற  விசாரணையின்போது, உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும், அந்த நிவாரண பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து கடந்த 23ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,  சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் காவல்துறை  அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது குறித்து 25ந்தேதி பதில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில் பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் பிரம்மானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் , சட்டவிரோத பதாகைகள் தொடர்பாக ஐகோர்ட்டின் உத்தரவுகளை பின்பற்றுவதில் கட்சி மிகவும் தெளிவாக உள்ளது என்று திமுகவை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவித்தார்.

மேலும், கடந்த 2017ம் ஆண்டு  நவம்பர் மாதத்தில் கோயம்புத்தூரில்  டெக்கி ரகுபதியின் மரணத்திற்குப் பிறகு பொது இடங்களில் சட்டவிரோத பதாகைகளை மெட்ராஸ் ஐகோர்ட் தடை செய்தது என்பதை சுட்டிக்காட்டியவர், சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமானவர், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், அவரை  இன்று வரை போலீசார் கைது செய்யவில்லை என்றும், இதில் சோகம் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரணமாக நடமாடுகிறார், காவல்துறையினரும், அதிகாரிகளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ளது  என்று குற்றம் சாட்டியதுடன், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து வாதாடிய தமிழகஅரசு வழக்கறிஞர் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண்: இந்த வழக்கில் சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட ரூ .5 லட்சம் இடைக்கால இழப்பீடு சுபஸ்ரீ குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், பேனர் சம்பந்தமாக உதவி நிர்வாக பொறியாளர் மற்றும் மற்றொரு நிறுவன அதிகாரிக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அதுபோல,  செயின்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து விசாரணை ஆய்வாளர் உட்பட இரண்டு காவல்துறை அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விசாரணை பரபரப்பாக நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து,  நீதிபதிகள், சுபஸ்ரீ மீது ஏறிய டாங்கர் லாரியின் தண்ணீர் இருந்ததா, காலியாக இருந்ததா என்று கேள்வி எழுப்பினர்

அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், அந்த லாரி காலியாக இருந்ததாக குறிப்பிட்டார்.

அதையடுத்து பேசிய நீதிபதி, பேனர் விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி (அதிமுக) ஏதேனும் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதா, அது தனது பணியாளர்களை நெகிழ்வு பலகைகளை அமைக்க அனுமதிக்காது என்று கூறியுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், சுபஸ்ரீ மரண வழக்கில் பிரதான குற்றவாளி வெளிநாட்டுக்கு தப்பி விட்டாரா? என்றதுடன்,  அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது, சட்டவிரோத பதாகைகளை அமைத்த குற்றச்சாட்டுடன், சுபஸ்ரீமீது லாரி ஏறியது ஆகிய இரண்டு  ஒரே எஃப்.ஐ.ஆரில் ஏன் இணைத்தீர்கள்? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும், சட்டவிரோத பதாகைகள் அமைக்கப்பட்டபோது போக்குவரத்து காவல்துறை ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? கூடுதல் போலீஸ் கமிஷனர் யார்? என்று கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக  காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்படும் உத்தேச நடவடிக்கை என்ன? என்ற நீதிபதிகள்,  நீங்கள் எப்போதும் கீழ் மட்ட அதிகாரிகளை பலிகடாவாக்குவீர்கள் என்று கடுமையாக சாடியதுடன்  ஜெயகோபாலை கைது செய்ய எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடடனர்.

தொடர்ந்து பேசிய  நீதிபதி, பிரதான குற்றவாளியை எப்போது கைது செய்யப் போகிறீர்கள்?  கடந்த விசாரணையின் போது எங்களால் உத்தரவிடப்பட்டபடி இந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய கண்காணிப்பு பற்றி என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்?

கார்ப்பரேஷன் அனுமதி மற்றும் அச்சுப்பொறியின் பெயரைக் குறிப்பிடாமல் ஃப்ளெக்ஸ் போர்டு அச்சுப்பொறிகள் தொடர்ந்து பேனர்களை அச்சிடுவது எப்படி? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அப்போது ஆஜரான பேனர் அச்சகங்களைச் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த வழக்கறிஞர் பி.எஸ். ஞானதேசிகன், சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவு காரணமாக தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் குறைந்துவிட்டது என்று கூறினார்.

அதைத்தொடர்ந்த, சுபஸ்ரீ  வழக்கின் விசாரணையை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், உதவி ஆணையர்கள் விசாரிக்கும் வழக்கை கூடுதல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.