கோவா முதல்வரின் உடல்நிலை குறித்த அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

னாஜி

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்த அறிக்கையை சீலிட்ட உறையில் அளிக்க வேண்டும் என அரசுக்கு மும்பை உயர்நீதிமன்ற கோவா கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 9 மாதங்களாக அவர் இதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். கோவா, மும்பை, நியூயார்க், டில்லி என பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை மாறி மாறி அளிக்கப்பட்டது. ஆயினும் உடல் நிலை தேறாத நிலையில் மனோகர் பாரிக்கர் இருக்கிறார்.

முதல்வர் உடல்நிலை சரியில்லாததால் மாநிலத்தில் அரசு நிர்வாகம் சரிவர நடப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன. இதனால் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்னும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் மத்திய பாஜக அரசு எந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் உள்ளது.

இந்நிலையில் டிராஜானோ டிமெல்லொ என்னும் கோவா அரசியல் பிரமுகர் மனோகர் பாரிக்கரின் தற்போதைய உடல்நிலை குறித்து அரசுஅறிவிக்க வேண்டும் என மும்பை உச்சநீதிமன்ற கோவா கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு அரசு தரப்பில் பதில் அளிக்கும் போது இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதாகவும் அதனால் முதல்வரின் உடல்நிலை குறித்து வெளிப்படையாக அறிவிக்க முடியாது எனவும் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற கிளை நேற்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து சீலிட்ட உறையில் அறிக்கை அளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது. இன்று நடைபெற உள்ள வழக்கு விசாரணையின் போது இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தத்தா பிரசாத் பதில் அளிக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி