ஓ.பி.எஸ். உறவினர் உள்ளிட்டோர் மீதான மோசடி புகார்: விசாரணை நடத்த காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின்  உறவினர் உள்ளிட்டோருக்கு எதிரான அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 78 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கரூரைச் சேர்ந்த ஆத்மிகா என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, 13 பேரிடம் 78 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக,  சுவாமிநாதன், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் உறவினர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு எதிராக புகார் அளித்தார்.

கரூரை சேர்ந்தஆத்மிகாவிடம் இவர்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக பணம் பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கிய நபரான சுவாமிநாதனை மற்றவர்களுக்கு தாம் அறிமுகப்படுத்த சுவாமிநாதனிடம் அவர்களும் பணம் கொடுத்ததாகவும், வேலை கிடைக்காததால் பணம் கொடுத்த 13 பேரும் தன்னை மிரட்டியதால் அவர்களுக்கு தன் நகைகளை விற்று 7 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுத்ததாகவும், தனக்கு எதிராக அவர்கள் அளித்த புகார் காரணமாக காவல் துறையினர் தன்னை தொல்லை செய்து வருவதாகவும் மனுவில் ஆத்மிகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் இது குறித்து துணை ஆணையர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி  ஆத்மிகா  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆத்மிகாவின் மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், புகாருக்கான ஆதாரங்களுடன் சென்னை மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் முன் நாளை மறுநாள் திங்கட் கிழமை ஆஜராகி சமர்ப்பிக்கும்படி மனுதாரரான ஆத்மிகாவுக்கு உத்தரவிட்டார்.

அந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி முடிவெடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may have missed