சென்னை

வெளியில் இருந்து எடுத்துச் செல்லும் உணவு மற்றும் குடிநீரை திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது

திரையரங்குகளுக்குள் பார்வையாளர்கள் எடுத்துச் செல்லும் உணவு மற்றும் குடிநீர் அனுமதிக்கப்படுவது கிடையாது. அத்துடன் திரையரங்குகளில் விற்கப்படும் உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றின் விலையும் மிகவும் அதிகமாக உள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுப்பியும் பயன் இல்லாமல் உள்ளது.

இதனால் சென்னையை சேர்ந்த தமிழ்வேந்தன் என்னும் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “பார்வையாளர்கள் எடுத்துச் செல்லும்குழந்தைகளுக்கான உணவு மற்றும் குடிநீர் உட்பட எதையும் திரையங்குகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அங்குள்ள உணவகங்களில் கூடுதல் விலைக்கு உணவுகள் விற்கப்படுகின்றன. பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்டும் உடலுக்கு தீங்கான உணவுகளே அங்கு விற்கப்படுகின்றன.

வெளி உணவுகளை திரையரங்குக்குள் எடுத்துச் செல்ல எந்த சட்டமும் தடை செய்யவில்லை. ஆயினும் திரையரங்குகள் மனித உரிமையை மீறி தடை செய்கின்றன. எனவே வீட்டில் இருந்து எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்களை திரையரங்குகளில் அனுமதிக்க உத்தரவு இடவேண்டும்” என தமிழ் வேந்தன் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு இந்த மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், “திரையரங்குகள் தனியாருக்கு சொந்தமானவை. ஆகவே அங்கு வெளியில் இருந்து உணவுப் பொருட்களை அனுமதிக்க சட்டத்தை கொண்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுப்டி செய்யப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.