இந்திய சுகாதார ஊழியர்களுக்கு எச் சி கியூ மருந்து அளிப்பது தொடரும் : ஐ சி எம் ஆர் அறிவிப்பு

--

டில்லி

ந்தியாவில் சுகாதார ஊழியர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் (எச்சிகியு) மருந்து அளிப்பது தொடரும் என இந்திய மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

மலேரியாவைக் கட்டுப்படுத்தும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் (எச் சி கியூ) மருந்தை கொரோனா சிகிச்சைக்குப் பல உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.  இந்தியாவில் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக இந்த மருந்து வழங்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் நேற்று முன் தினம், “ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை உயர்மட்டக் குழு பரிசோதனை செய்து வந்தது.  தற்போது அந்த சோதனையின் முடிவுகளை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து வருகிறது.  எனவே இந்த சோதனையை உயர் மட்டக்குழு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது” என அறிவித்தார்.

இது குறித்து இந்திய மருந்து ஆய்வுக் குழு இயக்குநர் பல்ராம் பார்கவா, “இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா சிகிச்சைக்கு எச் சி கியு அளிக்கப்பட்டுள்ளது   இந்த மருந்தை உட்கொண்டோருக்கு எந்த ஒரு பக்க விளைவும் இதுவரை உண்டாகவில்லை.  மாறாக கொரோனா பரவுதலைத் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.    இதை மருத்துவர் கண்காணிப்பில் மட்டும் உட்கொள்ள வேண்டும்.

ஒரு சிலருக்கு வயிற்றுப் புரட்டல், வாந்தி போன்றவை ஆரம்பத்தில் ஏற்படுவதால் இதை மருத்துவர் கண்காணிப்பில் மட்டும் உட்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.  மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த மருந்து முன்னணி சுகாதார தொழிலாளர்கள், துணை ராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் போன்ற கொரோனா தொற்றுக்கு அதிகம் வாய்ப்புள்ளோருக்குத் தொடர்ந்து அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.