மான்டியா:

ர்நாடக லோக்சபா தேர்தலில், மான்டியா ஹசன் தொகுதியில், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில், முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் தயவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி ஆட்சி செய்து வருகிறார்.

மகன் நிகிலுடன் குமாரசாமி

இரு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், பாஜகவை மீண்டும்  ஆட்சி அரியணையில் ஏற்றிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் ஒற்றுமையுடன் செயல் பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வர உள்ள லோக்சபா தேர்தலில், மான்டியா மாவட்டத்தில் உள்ள ஹசன் தொகுதிக்கு தேவகவுடா குடும்பத்தினரிடையே முட்டல் மோதல் தொடங்கி உள்ளது. ஏற்கனவே தேவகவுடாவின் ஒரு மகன் மாநில முதல்வராகவும், மற்றொரு மகன் மாநில அமைச்சராகவும் உள்ள நிலையில், தனது பேரன்களையும் அரசியலில் களமிறக்கி வருகிறார் தேவகவுடா.

சமீபத்தில், தனது மகன் ரேவன்னாவின் மகனான பிரஜ்வால் ரேவண்ணா (Prajwal Revanna) ஹசன் தொகுதியில் போட்டியிடுவார் என அதிரடியாக அறிவித்து, அவரது குடும்பத்திற்குள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், தேவகவுடாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் குமாரசாமி தனது மகன் நிகிலை ஹசன் தொகுதியில் நிறுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக ஹசன் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே குமாரசாமி  மற்றும் அவரது மனைவியும் எம்எல்ஏவாக உள்ள நிலையில், தற்போது மகனையும் எம்.பி.யாக குமாரசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். நடிகர் நிகில் கவுடா ஒருசில கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

தேவகவுடாவின் குடும்ப மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா,  லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ்-ஜே.டி. (எஸ்) ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த குழுவினர் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தொகுதி பங்கீடு குறித்து ஒருசில நாட்களில் இறுதி செய்யப்படும் என்று கூறி உள்ளார்.