டில்லி

ஞ்சாப் மகாராஷ்டிர வங்கி பொதுமக்களின் சேமிப்பைக் காப்பாற்றத் தவறியதற்கு எச் டி எஃப் சி வங்கித் தலைவர் தீபக் பரேக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப் பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் வாராக்கடன்கள் அதிகரித்தன.   இந்த வங்கியின் மொத்த வாராக்கடனான ரூ.8880 கோடியில் சுமார் 73% அதாவது ரூ.6500 கோடி வரை ரியல் எஸ்டேட் நிறுவனமான எச் டி ஐ எல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.   இதனால் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

அவற்றில் முக்கியமானவை வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பில் இருந்து தினம் ரூ. 1000 அல்லது மாதத்துக்கு ரூ.25000 மட்டுமே எடுக்க முடியும் என்பதாகும்.  இதனால் இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்போர் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.   பலரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தை இந்த வங்கியில் முதலீடு செய்துள்ளதால் பணம் மீண்டும் கிடைக்குமா என்னும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து எச் டி எஃப் சி வங்கித் தலைவர் தீபக் பரேக், “என்னைப் பொறுத்த வரை பொதுமக்களின் பணத்தை தவறாகச் செலவழிப்பதை விட வேறு பெரிய பாவம் கிடையது.   அடிக்கடி கடன்களை ரத்து செய்வதும் தள்ளுபடி செய்வதும் பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருப்போர் செய்வது மிகவும் தவறான செயலாகும்.  எந்த ஒரு நிதி நிறுவனத்துக்கும் நம்பிக்கை மற்றும் நாணயமே முக்கியமானதாகும்.

தற்போதைய நிலையில் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.  இந்நிலையில் கடினமாக உழைத்துச் சேர்த்த பணத்தை இழப்பது பொதுமக்களால் தாங்க முடியாததாகும்.   சேமிப்புக்கள் குறைந்து வரும் வேளையில் வட்டிக் குறைப்பு மற்றும் பணம் கிடைக்குமா என்னும் சந்தேகம் ஆகியவை சரியானது இல்லை.

அத்துடன் வாராக்கடன் அதிகரிப்பால் பல தொழில் நிறுவனங்களால் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   நாம் சரியாக இருந்தால் மட்டுமே கடனை கட்டுப்படுத்தி மீண்டும் பெற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.