2,000 ரூபாய் நோட்டுக்கு விரைவில் குட்பை!! பதுக்கல் ஆசாமிகளுக்கு சிக்கல்

டெல்லி:

கருப்பு பணம் இல்லாத தலைமுறையை உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை படிப்படியாக புழக்கத்தில் இருந்து விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை மக்கள் அறியும வகையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கும் திட்டத்தையும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பணமதிப்பிழப்பு அறிவிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையை விரைந்து மீட்டெடுக்கும் நோக்கத்தில் அதிக மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ரொக்க பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும், கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையிலும் தூய பொருளாதாரம் கொண்டு வர இந்த நடவடிக்கையை எடுத்ததாக மத்திய அரசின் தெரிவித்தது.

கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பை அறிவித்த பிரதமர் மோடி, எதிர்காலத்தில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என்று தெரிவித்திருந்தார். இந்த வகையில் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது முதல் நாட்டில் பண புழக்கத்தை வருமான வரித் துறை கண்காணித்து வருகிறது. இந்த முறை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் மீது க டுமையான நடவடிக்கை எடுத்து, கட்டாய அபராத வசூல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், யாரிடம் வேண்டுமானாலும் சோதனை நடத்தும் வகையில் வருமான வரித்துறைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்கள் சொத்து பரிமாற்றத்தில் இருக்கும் 50:50 என்ற கருப்பு மற்றும் வெள்ளை பண பரிமாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

முன்னதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டபோது பல விமர்சனங்கள் எழுந்தது. சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு இந்த அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு எளிதாக இருக்கும் என்றும், கருப்பு பணத்தை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டவுடன் தொழில்களில் வெளிப்படைத் தன்மை இருக்கும். ரொக்க பரிமாற்ற வர்த்தகம் குறையும் என்று நம்பப்படுகிறது. 97 சதவீத செல்லாத ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டது. பண மதிப்பிழப்பு காலத்திற்கு முன் புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

அதே சமயம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை திணிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 26ம் தேதி மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி ‘‘கருப்பு பண ஒழிப்பு க்கு எதிரான மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இரு க்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

‘‘இதற்கு ஏற்ப அன்றாட வாழ்க்கையில் ரொக்க பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்’’ என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார். டிஜிட்டல் பண பரிவர்த்தன குறித்து பிரச்சாரம் செய்ய பாலிவுட் நடிகர்கள் ஜாவித் அக்தர். அனில் கபூர், மாதவன்மூலம் ஆகியோரை தூதர்களாக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.