“அவரு ஜோக்கருங்க”: அமைச்சர் ஜெயக்குமாரை நக்கலடித்த ஸ்டாலின்

சென்னை:

டில்லியில்  நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் போராட்டம் வெற்றிபெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என்று விமர்சித்தார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்திரில் நேற்று  திமுக தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்  திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை யில்  நடைபெற்றது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்கள் விடுதலை – மக்கள் நிம்மதியாக வாழ சுமூகமான சூழல் ஆகியவற்றை வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் அழைப்பை ஏற்று பங்கேற்ற அனைத்து கட்சியினருக்கும் நன்றி கூறினார்.

மேலும்,  முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம்,  அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டு மென்பதற்காக, முன் ஜாமீன் கோரிய நிலையில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது; சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது இந்தியாவுக்கே அவமானம் என்று கடுமையான சாடினார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர், சிதம்பரம் கைது செய்யப்பட்டது,   காங்கிரஸ்க்கும் திமுகவுக்கும் மிகப்பெரிய தலைகுனிவுன்னு அமைச்சர் சொல்லிருக்காரே…? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு எதிர்கேள்வி கேட்ட ஸ்டாலின் “எந்த அமைச்சர்?” கூறினார் என்று வினவினார்.

அதற்கு  செய்தியாளர்: ” அமைச்சர் ஜெயகுமார்” சொல்லியிருக்கிறாரே என்றார்.

அதற்கு பதில் அளித்த ஸ்டாலின்,   “அவரு ஜோக்கருங்க” என்று நக்கலாக கூறிவிட்டு சென்றார்.