நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்டு: எஸ்.வி.சேகருக்கு நீதிபதி எச்சரிக்கை

சென்னை:

வதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத  பிரபல நகைச்சுவை நடிகரும், பாரதியஜனதா கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 12ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, கடந்த ஏப்ரல் 20ந்தேதி பேஸ்புக் பக்கத்தில் அவதூறான தகவல்களை பதிவிட்டிருந்தார். இதற்கு நாடு முழுவதும் உள்ள பெண் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பத்திரிகை சங்கத்தினர், மாதர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதைத்தொடர்ந்து,  தனது அவதூறான தகவல் குறித்த பதிவை,  முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார்.

இந்த நிலையில், எஸ்.வி.சேகர் மீது பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக தமிழகம் முழுவதும் பல நீதிமன்றங்களில் பத்திரிகையாளர்கள் தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

எஸ்.வி.சேகர்

நெல்லை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எஸ்.வி.சேகர் வரும் ஜூலை  12ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி   உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு செய்தி குறித்து,  நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக, மன்றத்தின் தலைவர் அய்கோ என்கிற அய்.கோபால்சாமி சார்பாக வழக்கறிஞர்கள் டி.ஏ.பிரபாகர், வினோத் தாசன் ஆகியோர் நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.அவர்கள் தாக்கல் செய்தி மனுவில்,  எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவால், சமூகத்தில் என்னைப் போன்றோரின் மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட்டது. இந்த அவதூறு பதிவை வேண்டுமென்றே வெளியிட்டு அவமானத்தை ஏற்படுத்திய எதிர்மனுதாரருக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.