Random image

இந்தியாவும் பாகிஸ்தான் வீரர்களின் தலையை வெட்டி வீசுகிறது: நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி பேச்சு:  சமூக ஆர்வலர்கள் கண்டனம்

“இந்திய வீர்ர்களும், பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலைகளை வெட்டி வீசுகிறோம், ஆனால் அவற்றை பொதுவெளியில் காட்சிப்படுத்துவது கிடையாது” என்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தெரிவிப்பதாவது:

“பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டி வீசியதாக படக் காட்சிகள் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிலையில், “இந்திய ராணுவ வீரர்களும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலையை வெட்டி வீசுவது உண்டு. ஆனால் அதை வெளிப்படுத்துவதில்லை” என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நமது ராணுவத்தின் சில நடவடிக்கைகள் மனித உரிமையை மீறுவதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுவது உண்டு. ஆனால் இந்தியாவின் சார்பில் முதன் முதலாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். ராணுவத்தின் மாண்பை குலைக்கும் வகையில் பேசி இருக்கிறார்.

இது  இந்தியா கையெழுத்திட்டுள்ள சர்வதேச ஒப்பந்தத்துக்கு  சரத்துகளுக்கும் எதிரானது..

1949 ஆம் ஆண்டு இந்தியா  ஜெனீவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன் 15வது சரத்தில், “எல்லா நேரங்களிலும், குறிப்பாக ஒரு போருக்குப் பிறகு, சம்மந்தப்பட்ட இரு தரப்பும் (நாடுகள்)   தாமதமின்றி, காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைத் தேடவும், அடையாளப்படுத்தவும் அனைத்து  நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவேண்டும், இறந்தவர்களை தேடி அவர்களின் உடல்கள் அழுகிப்போகாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நிர்மலா சீதாராமனின் பேச்சு இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக உள்ளது. இது நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக்கொள்வது போல உள்ளது. இவரது பேச்சை மேற்கோள்காட்டி சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தான் இந்தியாமீது குற்றச்சாட்டு வைக்கும். பல நாடுகளும் நம்மை கண்டனம் செய்யவும் வாய்ப்புள்ளது.

2011 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே  மோதல் ஏற்பட்டது. அப்போது இறந்த இந்திய வீரர்களை  பாகிஸ்தான் வீரர்கள் மிகமோசமாக நடத்தி உடல்களை சிதைத்தனர்.  இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

2013 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடேயே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் இந்திய ராணுவ அதிகாரிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

2016ஆம் ஆண்டு இந்தியா   “ஆபரேஷன் ஜிஞ்சர்” என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.  2011 ஆம் ஆண்டைய பாகிஸ்தானின் செயல்பாட்டிற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது கருதப்பட்டது. ஆனால் இதுவரை பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த எந்த அதிகாரியும், இந்திய வீரர்களை  சர்வதேச  சட்டத்துக்குப் புறம்பாக நடத்தியதாக  ஒத்துக்கொள்ளவில்லை.

ஆனால் இப்போது முதல்முறையாக இந்தியாவின் ராணுவ அமைச்சர் “பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தலைகள் வெட்டிவீசப்படுகின்றன” என்று கூறியிருக்கிறார்.

இது இந்தியாவின் மாண்பைக் குறைக்கும் செயலாகும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.