இது மத்தியப் பிரதேச கொரோனா கூத்து! – முத்தமிட்ட சாமியார் பலி, 24 பக்தர்களுக்கு பாசிடிவ்!

இந்தூர்: கொரோனாவை குணப்படுத்துகிறேன் என்று தன் பக்தர்களின் கைகளில் முத்தமிட்ட ஒரு சாமியார் வைரஸ் தாக்கி இறந்துவிட, இதுவரை, அவரின் பக்தர்கள் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்னும் பலர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடுமை மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில், நயாபுரா என்ற பகுதியில் நடந்துள்ளது. அஸ்லாம் பாபா என்பது அந்த சாமியாரின் பெயர்.

கொரோனா வைரஸ் தொற்றியவர்களை, கைகளில் முத்தமிட்டு குணப்படுத்துகிறேன் என்று சொல்லி, பலரின் கைகளில் முத்தமிட்ட அஸ்லாம் பாபா என்ற சாமியார், கடைசியில் அந்த கொரோனா வைரஸ் தாக்குதலிலேயே இறந்துபோனார். அவரின் அற்புத சக்தி, அவரைக்கூட காப்பாற்றவில்லை.

அப்பகுதியில், இதுவரை மொத்தம் 85 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 24 பேர் அந்த சாமியாரின் பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பகுதியில், இதுவரை 4 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இதில், இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், மக்கள் தொடர்ந்து அந்த சாமியாரை நாடிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.