சென்னை :

குட்கா ஊழல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதை அடுத்து , இதில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி விற்கப்படுகிறது. இப்படி சட்டவிரோத குட்கா விற்படுவதற்காக, அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் வழக்குத் தொடுத்தார்.

இன்று விசாரணை வந்த அந்த வழக்கில், சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட  ‘குட்கா’ விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜெ.அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்த விசாரணையை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரணை நடைபெறவேண்டும் என்ற காரணத்தால், சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம், ஊழல் – லஞ்ச பேர்வழிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டு, சட்டப்படியான நியாயம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இதில் சிபிஐ உடனடியாக விசாரணையைத் துவக்க வேண்டும். தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுமதித்து, அதற்காக மாதந்தோறும் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குட்கா முதலாளிகளின் டைரியிலேயே இடம்பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் ஆகிய இருவரையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவிநீக்கம் செய்து, முழுமையான – உண்மையான – விரைவான விசாரணை நடைபெற தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.