சென்னை:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசரணை நடத்தி வரும் ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார்.

3 முறை விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. அவர்களிடம் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தியும் வருகிறார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், பாராளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி. யுமான தம்பித்துரை ஆகியோருக்கு  ஆறுமுகசாமி ஆணையம் கடந்த வாரம் சம்மன் அனுப்பி உள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ், விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில், அவர்கள் அலுவல் காரண மாக கலந்துகொள்ளாததால், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜனவரி 11 ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும்  சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  ஜனவரி 7ம் தேதி ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், விஜயபாஸ்கர் 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெ.சிகிச்சையின்போது அமைச்சர் விஜயபாஸ்கர்தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். மேலும், அப்போது சசிகலாவின் துதிபாடியாகவும்,  சசிகலாவின் கண்ணசைவுக்கு ஏற்பவே செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையில் ஜெ.சிகிச்சை குறித்த விவகாரத்தில், அமைச்சரின் கீழ் செயல்படும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கருத்து சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அவரது பின்புலம் குறித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராதாகிருஷ்ணனுக்கு பின்புலமாக டிடிவி தினகரன் இருந்து செயல்பட்டு வருகிறார் என்று பகிரங்கமாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் வலுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜரானால், தன்னிடம் ஜெ. சிகிச்சை மற்றும் வெளிநாட்டு சிகிச்சை, ராதாகிருண்ணன் தகவல் போன்றவை குறித்து ஆணையம் கேள்வி எழுப்பும் என்பதாலும், அதுகுறித்து  சசிகலா வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள்… அப்போது பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால்தான் அவர் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாத தால் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் ஜெ. மறைவை தொடர்ந்து நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலின்போது சசிகலாவுக்கு ஆதரவாக பணியாற்றியபோது… அவரது வீட்டில் இருந்து பணப்பட்டுவாடா குறித்த டைரி சிக்கியது குறிப்பிடத்தக்கது.