Random image

வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுவேன்: டிடிவியை தெறிக்கவிடும் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை:

சிலரின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுவேன் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிடிவியை மறைமுகமாக எச்சரித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, டிடிவிக்கு ஆதரவாக பணப் பட்டுவாடா அனைத்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து நடைபெற்றதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்தே அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.

அதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த அதிமுகவில் இணைந்த விஜயபாஸ்கர் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த வாரம் புதுக்கோட்டையில், நடைபெற்ற அ.ம.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கரை மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

விஜயபாஸ்கர் குட் டாக்டர் இல்லை என்றும் அவர் குட்கா டாக்டர் என்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ஒரு அலிபாபா குகை என்றும், அதற்குள் நகைகளும், பணமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவர் வீட்டுக்கு  ரெய்டுக்கு வராத அமைப்புகளே இல்லை என்றும் கூறினார்.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது,   தீவிரமாக வேலை பார்த்த விஜயபாஸ்கர் என்னை வெற்றி பெறச் செய்ய ஆர்வமாக இருப்பதாக கருதினேன்.  ஆனால், பின்னர் தான் தெரிந்தது அவர் ஈ.பி.எஸ் உடன் சேர்ந்து தேர்தலை நிறுத்த வேலை பார்த்துள்ளார் என்று குறிப்பிட்டார்

அதைத்தொடர்ந்த, தன்னை  விஜயபாஸ்கர் சமீபத்தில் சந்தித்ததாகவும்,  எடப்பாடி பழனிசாமி தன்னை கைவிட்டுவிட்டதாக புலம்பினார் என்றும் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற அ.தி.மு.க விழாவில் பேசிய அமைச்சர், டிடிவி பெயரை குறிப்பிடாமல் பேசினார். அப்போது,  ஒரு வாரம் மட்டும் பொறுத்திருங்கள் பலரின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்ற உள்ளேன் என்று கூறி தொண்டர்களின் புருவங்களை உயரச் செய்தார்.

இதே புதுக்கோட்டையில் தான் போட்டிக்கூட்டம் பிரமாண்டமாக நடத்த இருப்பதாக கூறிய விஜயபாஸ்கர், அந்த கூட்டத்தில் லட்சம் பேர் பங்கு பெறுவார்கள் என்றும், அந்த கூட்டத்தில்,  பலரின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றும் வகையில் பல்வேறு தகவல்களை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

தான் கூட்ட உள்ள நிகழ்சியை  கச்சேரி என்று கூட கூறலாம், அந்த கச்சேரியில் பலரின் தோல் உரித்து காட்டப்படும் என்றும் திகிலூட்டினார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்தான் டிடிவியின் வலதுகரமாக இருந்து பின்னர் எடப்பாடி அணியில் இணைந்தவர். இதன் காரணமாகவே இவரது வீடு மற்றும் பண்ணைகள் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தன்னை குட்கா பாஸ்கர் என்று விமர்சித்த டிடிவி குறித்து அதிரடி மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்களை விஜய பாஸ்கார் விரைவில் வெளியிடுவார் என்றும் அவரது துதிபாடிகள் கூறி வருகிறாரகள்.