பிஎம்கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு ரூ. 893.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது!

டெல்லி: பிஎம்கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத்துறைக்கு ரூ. 893.93 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில் கூறினார்.

மத்திய பாஜக அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  தொடங்கிய பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், மத்தியஅரசு அதை மாற்ற மறுத்து வருகிறது. இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தின்போது,   பிஎம் கேர்ஸ் நிதியத்தை உருவாக்குவதற்கு என்ன தேவை வந்தது? என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகதா ராய்  கேள்வி எழுப்பினார்.  மேலும்,  பிஎம் கேர்ஸ் நிதியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், அந்த நிதியை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதுபோல,  மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி, “கொரோனா தொற்றை எதிர் கொள்ளவே பிம்-கேர்ஸ் உருவாக்கப்பட்டது. பிம்-கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும், மாநில அரசுகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்,   “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்களுக்காக பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து, சுகாதாரத்துறை  அமைச்சகம் ரூ. 893.93 கோடி பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.