திருச்சி: மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

2019ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 2ம் அலையாக, உருமாறிய இந்த வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 16ம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முதற்கட்டமாக 166 மையங்களில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கிடையே தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஊசி போட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்து உள்ளார்.

கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி இரண்டுமே பாதுகாப்பானவை தான். எந்த விதமான பயமும் வேண்டாம். தமிழகத்தில் யாருக்கும் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படவில்லை  என்றும் அவர் கூறினார்.