தலைமைப் பயிற்சியாளரின் அதிகாரத்தைக் குறைத்த இந்திய கிரிக்கெட் வாரியம்!

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுபவர், இனிமேல், தனது விருப்பத்திற்கேற்ப தனக்கான உதவி பயிற்சியாளரை தேர்வுசெய்துகொள்ள முடியாதவாறு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; புதிய விதிகளின்படி, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும். பின்னர், உதவிப் பயிற்சியாளர்களை நியமிக்கும் பொறுப்பு எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் குழுவில் பிரசாத் தவிர, ஜதின் பரன்பே, காகன் கோடா, சரந்தீப் சிங் மற்றும் தேவங்க் காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தலைமைப் பயிற்சியாளரே, தனக்கான உதவிப் பயிற்சியாளரை சுதந்திரமான முறையில் நியமித்துக்கொள்ளும் வழக்கம், ஜான் ரைட் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்த காலத்தில் தொடங்கியது.

தலைமைப் பயிற்சியாளருக்கு சுதந்திரம் வழங்கும் நடைமுறையை, தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அழுத்தமாக ஆதரிக்கிறார். அப்போதுதான் அனைவரும் எளிதாக ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்பது அவரின் கருத்து. சாஸ்திரி, பாரத் அருண் என்பவரை பந்துவீச்சுப் பயிற்சியாளராக தேர்வு செய்தார்.

You may have missed